புத்துணர்வு தரும் உணவுகள்

உணவு

பிஸி வாழ்க்கையில், வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவை நம்மை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. உடலையும் மனதையும் நல்ல முறையில் பராமரித்தால், புத்துணர்வு தானாகவே கிடைக்கும். சரியான உணவு வகைகளை, சரியான நேரத்துக்கு தவிர்க்காமல் எடுத்துக்கொள்வதும், போதுமான நீர் ஆகாரங்களைப் பருகுவதும் சோர்வைத் தவிர்த்து சுறுசுறுப்போடும் புத்துணர்வோடும் வலம் வர நமக்கு உதவும்.

நீர் உணவு

புத்துணர்வுடன் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். (சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரையின்படி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்) உடலில் நீர் அளவு குறையும்போது, உடற்சோர்வு ஏற்படும்.

தேன் நீர்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு அவுன்ஸ் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர கபத்தன்மை சீராகி, உடல் சோர்வின்றி இருக்கும்; ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லது.

முருங்கைக்கீரை சூப்

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம். முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.

அருகம்புல் சாறு

அருகம்புல் ஓர் அற்புத மூலிகை. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது. உடல் வறட்சியை நீக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. விஷக்கடி, தோல் ஒவ்வாமைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து. அருகம்புல்லில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளன. களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி அடிக்காத இடங்களில் சேகரித்த அருகம்புல்லை சுத்தம்செய்து ஒரு டம்ளர் நீரைச் சேர்த்துப் பிழிந்து எடுத்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க நல்லது.

ராகி கூழ்

முளைகட்டிய ராகி ஒரு பங்கு, தோல் நீக்கிய முழு உளுந்து அரைப் பங்கு, சுக்கு, ஏலக்காய் சிறிதளவு அனைத்தையும் வறுத்து, பின் மாவுபோல் அரைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு எடுத்து, கஞ்சி காய்ச்சி பால், சர்க்கரை கலந்து பருக உடல் பலம் பெறும். ராகியில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. குழந்தைகள். சர்க்கரை நோயாளிகள் (சர்க்கரையைத் தவிர்த்துப் பயன்படுத்தலாம்), இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் போன்ற அனைவருக்கும் சிறந்தது.

சோயா பால்

ஒரு கைப்பிடி அளவு சோயா எடுத்து, நீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து, பால் எடுத்துக் காய்ச்சி, ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம். இதில், அதிக அளவு புரதச்சத்துடன் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், கனிமச்சத்துகள் உள்ளன. மாதவிடாய் நின்ற காலத்தில் இது ஒரு சிறந்த உணவு.

பார்லி நீர்

பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும். சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

சுக்கு காபி

சுக்கு, மல்லி, ஏலக்காய் மற்றும் பனங்கருப்பட்டி கலந்து, காபிபோல் செய்து, பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ குடித்துவர, பசி மந்தம், தலைவலி, மூட்டுவலி நீங்கும். மேலும், சுறுசுறுப்புடன் இருக்கவும் இது உதவும்.

நெல்லிக்காய்ச் சாறு

2 அல்லது 3 பெரிய நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்க, பார்வைத்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நீக்கி, மஞ்சள் தூள் கலந்து பருகிவர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

- ச.ஆனந்தப்பிரியா

படம்: சூ.நந்தினி


புரதச்சத்து நிறைந்த உணவுகள்...

புரதம் நிறைந்த உணவுகள் நமது உடல் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் முக்கியமானவை. புரதச்சத்தை நாம் பயறு வகைகள், மாமிச உணவுகள், முட்டை, பால், மீன், பருப்பு வகைகளில் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

நச்சு அகற்றும் மூலிகை உணவுகள்...

அருகம்புல், கீழாநெல்லி, கரிசாலை போன்ற மூலிகைகளை உணவில் சேர்க்கும்போது, நம் உடலில் சேரும் தேவை இல்லாத நச்சுக்களை நீக்கி, புத்துணர்வுடன் வைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick