Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ஸ் எனும் ஆரோக்கியத்தின் தூதுவர்கள்!

தி காலம் முதலே மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து வருபவை செல்லப்பிராணிகளே. மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனால், தனிமையில் வாழ முடியாது. அவனுக்கு எப்போதும் ஒரு துணை வேண்டும் என்பதற்காக, பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தான். அந்தக் காலத்தில், நாய்கள் வேட்டைக்காகவும், கழுதைகள் மூட்டை சுமக்கவும், மாடுகள் வண்டி இழுப்பதற்கும், யானைகள் பெரிய பெரிய மரங்களை இழுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தின் வருகையால் விலங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவது, படிப்படியாகக் குறைந்துவிட்டது. இப்போது, விலங்குகள் செல்லப்பிராணிகள் ஆகிவிட்டன.

இன்று வளர்ப்புப் பிராணிகளின் பட்டியல் நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல், ஆடு, குதிரை, என நீண்டுகொண்டே செல்கிறது. அதிலும் சிலர் வீட்டுக்கு உள்ளேவைத்து வளர்ப்பது, பெட்ரூமில் வைத்துக்கொள்வது என வளர்ப்பில் புதுமைகளையும் படைக்கிறார்கள். செல்லப்பிராணிகளை வளர்ப்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல... அதனால், பல மருத்துவப் பயன்களும் உள்ளதாக நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

செல்லப்பிராணியுடன் நேரம் செலவழிப்பது மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கிறது.  செல்லப்பிராணியிடம் பேசும்போதும், அதனுடன் விளையாடும்போதும் நமக்கு ஆறுதல் கிடைக்கிறது. செல்லப்பிராணிகள் நம்மிடம் எந்த வேறுபாடும் இன்றி, அன்பு காட்டு்பவை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் `தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்களைப் பார்த்துக் கொண்டிருப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்’ என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பிராணிகளின் மனம் அதிகச் சிக்கல் இல்லாதது. அதற்குப் பசித்தால் சாப்பிடும்; கோபம் வந்தால் தாக்கும்; அன்பாக இருந்தால் விளையாடும். இந்த நிலையில்தான் அவை எப்போதும் இருக்கும். ஆனால், மனிதன் அப்படி அல்லாமல், எண்ண அலைகளும், உணர்ச்சி நிலைகளும் மாறிக்கொண்டே இருப்பவன். மேலாளரிடம் கோபப்பட்டு, வீட்டுக்குத் திரும்புகிறார் ஓர் ஊழியர். வீட்டுக்கு வந்ததும் தன் காலணியைக் கழற்றி வீசுவதும், செல்போனைத் தூக்கிப் போடுவதுமாக இருக்கிறார். அவருடைய நாய் பாசத்துடன் வாலை ஆட்டிக்கொண்டு அவரிடம் வந்து உட்காருகிறது. அலுவலக வெறுப்பை அவர் நாயிடம் திரும்பத் திரும்பக் காட்டினாலும், அது அவரிடம் அன்போடு திரும்பி வந்துகொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில், ‘நாம்தான் கோபத்தில் இருக்கிறோம், அது நம்மிடம் மிகுந்த அன்போடு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது’ என்பதை அவரால் மனதளவில் உணர முடியும். இதனால், கோபம் குறைந்து, இயல்புநிலைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் உள்ளவர்களின் உடல், மனநலம் சீரான நிலையில் இருக்கும்.  குழந்தைகளைப் பொறுத்தவரை செல்லப்பிராணி வளர்ப்பதைச் சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்கும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும். சின்னக் குழந்தைகளிடம் பிராணிகளைக் கொடுக்கும்போது, அவர்கள் அதை ஆசையோடும் அன்போடும் அக்கறையோடும் கவனிக்கக் கற்றுக்கொள்வார்கள். அதை எப்படிப் பராமரிப்பது, நேரம் ஒதுக்குவது, பொறுமையாகக் கையாள்வது, உணவு கொடுப்பது என்று தானாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

தெரிந்தவர் ஒருவர், கிளி ஒன்றை வளர்க்கிறார். அது இரவு 10 மணிக்கு மேல் கத்த ஆரம்பித்துவிடும். விளக்கை அணைத்து, அதன் கூண்டைத் துணியால் மூடினால்தான் அமைதியாகும். அதேபோல, காலை 5:30 மணிக்கு எல்லாம் சப்தம்போட ஆரம்பித்துவிடும்.

செல்லப்பிராணிகள் இருப்பதால், டைம் மேனேஜ்மென்ட் கற்றுக்கொள்ள முடியும். அது காலையில், சூரியன் உதிக்கும் முன்பே எழுந்துவிடும். நம் வருகைக்காகக் காத்திருக்கும். அதற்குப் பசிக்குமே, உணவு தயாரிக்க வேண்டுமே என்ற எண்ணமும் நமக்குள் தன்னால் மேலோங்கி, நாமும் நேரத்துக்கு நம் வேலைகளைச்செய்யக் கற்றுக்கொள்வோம். நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் செல்பவர்களுக்கு, இதய நோய்கள் வருவது குறையும். நாய்கள் நன்றி உள்ளவை;  நம்பிக்கையானவையும்கூட. ஒருவர் மேல் இருக்கும் கோபத்தால், அவரைப் பற்றி நாம் மற்றவரிடம் திட்டினாலோ, குறைகூறினாலோ அது நமக்கே வினையாக முடியும். ஆனால், நம் செல்லப்பிராணிகளிடம் அவர்களைப் பற்றித் திட்டித் தீர்க்கும்போது, அவர்களுக்கு மன அழுத்தம் குறையும். அதற்குப் புரியவில்லை என்றாலும், வாலை ஆட்டிக்கொண்டு நம் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும். இதனால், மன அழுத்தம் குறையும். அதன் மூலமாக நமக்கு இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

ஏ.டி.ஹெச்.டி (ADHD) குழந்தைகள், அதீத துறுதுறுப்போடு இருப்பார்கள். அவர்களுக்கு நாய்களால் மட்டுமே ஈடுகொடுக்க முடியும். நாய்கள் எவ்வளவு விளையாடினாலும் சோர்ந்து போகாது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், யாரிடமும் எளிதில் பழக மாட்டார்கள். அவர்களுக்கு, கண்டிப்பதோ, குறைகூறுவதோ பிடிக்காது. கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள். விலங்குகளுக்கு அதுபோன்ற விஷயங்கள் தேவை இல்லை என்பதால், அவற்றின் தோற்றம், அவை நடந்துகொள்ளும் விதம் அவர்களுக்குப் பிடித்துப் போய், அவற்றுடன் உற்சாகமாக விளையாடுவார்கள்.  செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை மூட் அப்செட் என்பதே கிடையாது. எப்போது எல்லாம் நாம் அவற்றோடு விளையாட நினைக்கிறோமோ, அப்போது அவை நம்முடன் இருக்கும்.  வயதானவர்களுக்கு ஏற்படும் மிக மோசமான பிரச்னை... தனிமை. செல்லப்பிராணிகள் அவர்களின் தனிமையைப் போக்குகின்றன. அவர்களைப் பாதுகாக்கின்றன.

கர்ப்ப காலத்தில் குட்டி நாய்களை வளர்ப்பது நல்லது அல்ல. கர்ப்ப காலத்தில் குமட்டல் உணர்வு இருக்கும் என்பதால், பிராணிகளின் முடி, வாடை போன்றவை தொந்தரவு கொடுக்கும். மற்றபடி, செல்லப்பிராணிகளை வளர்ப்பது மனநிலையை மேம்படுத்தும்.

- பி.கமலா, படம்:  ஆர்.கே.சர்வின் 

மாடல்:  ஹர்ஷிதா


செல்லப்பிராணிகள் வளர்ப்பு டிப்ஸ்

எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ, கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். நாயின் எச்சில் அல்லது உடலில் ஒட்டியிருக்கும் கழிவில் இருந்து நாடாப் புழு முட்டை, கிருமி பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனையின் ரோமம் உதிர்வதால், பிரச்னை உண்டாகலாம். எனவே, டாக்டர் ஆலோசனையப் பெற்று அதன்படி நடப்பது நல்லது.

எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும். நாய்களுக்கு பூச்சி மருந்தும் சீரான இடைவெளியில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், நாடாப்புழு வந்துவிட்டால், அதனால் வளர்ப்பவருக்கும் பிரச்னை ஏற்படும்.

மாமிசம், மீன் போன்றவற்றை சமைக்காமல் கொடுக்கக் கூடாது.  செல்லப்பிராணி தங்குமிடம், கூண்டு நன்கு விசாலமாக இருக்க வேண்டும். அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.


பி.அருண், திருப்பூர்.

“எனது தங்கை கணவர் கடந்த 15 வருடங்களாக பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar disorder) எனும் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சொந்தத் தொழில் செய்துவருகிறார். பெரும்பாலும் சோர்வாக உள்ளார். தொழிலில் லாபம் வந்தால், கடையைக் கவனிப்பது, நஷ்டம் எனில் முடங்கிவிடுவது என இருக்கிறார். தன்னம்பிக்கைக் குறைந்தவர்போலப் பேசுகிறார். பைப்போலார் டிஸ்ஆர்டர் பிரச்னை ஏன் வருகிறது. இதை எப்படிப் போக்குவது?”

டாக்டர் ச.ராஜ்குமார்,

மனநல மருத்துவர், கோயம்புத்தூர்.


“பைப்போலார் என்பதே இரு துருவங்களான மேனியா மற்றும் டிப்ரஷன் உணர்வுகளுக்கு இடையே அல்லாடுவதுதான். `மேனியா’ என்றால் அதீத சந்தோஷத்தை, உற்சாகத்தை வெளிப்படுத்துவது; `டிப்ரஷன்’ என்றால், அளவுக்கு அதிகமான சோர்வோடு மிகுந்த சோகமாக இருப்பது. இந்த பைப்போலார் டிஸ்ஆர்டர் வருவதற்கு அடிப்படைக் காரணம் மனஅழுத்தம்தான். சிலருக்கு சூழ்நிலை காரணமாகவும் வர வாய்ப்பு உள்ளது. இதைக் குணப்படுத்த மூட் ஸ்டெபிலைஸர் (Mood stabilizer) மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். மேனியாவாக இருந்தாலும், டிப்ரஷனாக இருந்தாலும், இந்த மூட் ஸ்டெபிலைசர் கள்தான் அவர்களை இயல்பாக வைத்திருக்கும். மேனியா நிலையில் இருக்கும்போது அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். அதுவே, டிப்ரஷன் நிலையில் இருக்கும்போது சாப்பிடவே மாட்டார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பைப்போலார் டிஸ்ஆர்டரில் பல நிலைகள் உள்ளன. உங்கள் தங்கை கணவர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பதைத் தகுந்த மனநல மருத்துவரை அணுகிக் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கு ஏற்ப மூட் ஸ்டெபிலைஸர் தருவது நல்லது. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான கால அளவு மாறுபடும்.”

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஈஸி 2 குக்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close