நலம் காக்கும் கற்றாழை

அழகு முதல் ஆரோக்கியம் வரை

வீட்டின் வராண்டாவிலோ, ஜன்னல் ஓரத்திலோகூட சிறிய தொட்டிகளில் வளர்க்கக்கூடிய எளிய மூலிகை, கற்றாழை. உடலுக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்கும் கற்றாழை, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது. 

கற்றாழையில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நச்சுக்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. எனவே, உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைக் கற்றாழையால் குணப்படுத்த முடியும். கற்றாழையைப் பயன்படுத்தும் முன்னர், அதன் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் சோற்றை (ஜெல்லி போன்ற பகுதி), குறைந்தது ஏழு முறையாவது ஓடும் நீரில் (குழாய் நீர்) கழுவ வேண்டும். கற்றாழைச் சோற்றுடன் கடுக்காய் தூள் அல்லது படிகாரத்தூள் சேர்த்து, அதை ஒரு துணியில் கட்டி, மேலே தொங்கவிட்டால், அதில் இருந்து நீர் வடிந்து, கற்றாழைச் சாறு கிடைக்கும்.

கற்றாழைச் சாற்றுடன், ‘அகார்’ எனப்படும் கடற்பாசியையும் சர்க்கரையையும் சேர்த்துக் கிளறி உண்டால், உடல் வெப்பம் தணியும். இதை, காலை நேரத்தில், தொடர்ந்து உண்டுவந்தால், வயிற்றுப்புண் மற்றும் மூல நோய் குணமாகும்.

340 கிராம் சிற்றாமணக்கு எண்ணெயுடன், 85 கிராம் கற்றாழைச் சோற்றைக் கலந்து, அதில் 8 கிராம் வெந்தயத்தையும், அரிந்த வெள்ளை வெங்காயம் ஒன்றையும் சேர்த்து, நன்றாகக் காய்ச்சி, வடிகட்டிக் குடித்துவந்தால், உடல் வெப்பம் குறையும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

கற்றாழையையும் நல்லெண்ணெயையும் சம அளவில் எடுத்து, தைலம்போன்ற பதம் வரும் வரை அடுப்பில் காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை தினமும் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், உடல் வெப்பம் தணியும்.

10-15 கிராம் கற்றாழைச் சோற்றுடன், சிறிது மஞ்சள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து உண்பதால், ‘ஸ்ப்லீனோமெகலி’ எனப்படும் மண்ணீரல் வீக்கமும், ‘ஹெபடோமெகலி’ எனப்படும் கல்லீரல் வீக்கமும் குறையும். கற்றாழைச் சோற்றை, 10-15 கிராம் உண்டுவந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். உடலும் வலிமை பெறும். இதயம் மற்றும் ரத்தநாளங்கள், ஆரோக்கியமாக இருக்க உதவும், கல்லீரலின் செயல்பாடுகளைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். உடலின் நோய் எதிர்ப்பு  மண்டலத்தை வலுப்படுத்துவதால், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்குத் துணை மருந்தாக உதவுகிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.  கற்றாழையுடன், சீரகம் மற்றும் கற்கண்டு சேர்த்து, அரைத்துக் குடித்தால், வயிற்றுப்போக்கின்போது, சளி மற்றும் ரத்தம் வெளியேறுவதைக் குணப்படுத்தலாம்.

கற்றாழையைச் சாறு எடுத்து, சம அளவு, வெண்ணெய், கற்கண்டு மற்றும் வால் மிளகுத்தூள் கலந்து குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்குவதுடன், உடல் அரிப்பும் குறையும். கற்றாழையைக்கொண்டு தயார் செய்யப்படும் குமரி லேகியம், பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.டி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைக்கு மிகச்சிறந்த மருந்து.

குளிர்ச்சியான உடல் அமைப்பு கொண்டவர்களும், சைனஸ் உள்ளவர்களும், கற்றாழை மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். அவசியம் உண்ணவேண்டிய சூழல் ஏற்பட்டால், பகலில் மட்டுமே உண்ண வேண்டும்.

வறண்ட சருமத்தினருக்கும் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கும், கற்றாழை மிகச்சிறந்த சருமக் காப்பானாக உதவுகிறது. வறண்ட சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கும் கற்றாழை, எண்ணெய்ப் பசை சருமத்தில் எண்ணெயின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. `எபிதீலியல் செல்ஸ்’ எனப்படும் புறத்தோலின் மேல் உள்ள உயிரணுக்களைப் புதுப்பிக்கும் ஆற்றல் உடையதால், தீக்காயங்களை ஆற்றும் சிறந்த மருந்தாகக் கற்றாழை பயன்படுகிறது.

- ஜெ.விக்னேஷ்
படங்கள்: ர.க.சர்வின்
மாடல்: வர்ஷா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick