கன்சல்ட்டிங் ரூம்

லாவண்யா, கரூர்.

“எனக்கு வயது 21. என்னுடைய ரத்த வகை பி நெகட்டிவ். கல்லூரியில், வெளியில் நடக்கும் ரத்த தான முகாம்களுக்குச் செல்லும்போது, `நெகட்டிவ் பிரிவைச் சேர்ந்தவர்கள் தானம் செய்ய  தேவையெனில் சொல்கிறோம்’ என்று அனுப்பிவிடுகின்றனர். நெகட்டிவ் பிரிவைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாதா?’’

டாக்டர் ஜெ.அனன்யா, பொது மருத்துவர், திருப்பூர்.

“உங்கள் ரத்த வகை மிகவும் அரியது என்பதால் தற்போது வேண்டாம் என்று சொல்லியிருப்பார்களே தவிர, நீங்கள் எப்போதுமே ரத்த தானம் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக, மக்களிடம் பாசிட்டிவ் வகை ரத்தமே அதிகமாகக் காணப்படுகிறது; நெகட்டிவ் வகை ரத்தம் மிகக் குறைவாக இருக்கிறது. அதனால், நெகட்டிவ் வகை ரத்தத்துக்கான தேவை குறைவு. ஆனால், கிடைப்பதும் அரிது. முகாமில் ரத்த தானம் செய்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 42 நாட்களுக்குள் அந்த ரத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், அது வீணாகிவிடும். அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குள் நெகட்டிவ் வகையினருக்கு ரத்தம் தேவை இல்லை எனில், நீங்கள் கொடுத்தும் பயன் இல்லாமல் போய்விடும். அதுவே, தேவை உள்ள நேரத்தில் ரத்த வங்கியில் இருந்து உங்களை அழைப்பார்கள். அப்போது கொடுத்தால் தேவையானவருக்குப் பயன்படும். பெண்கள் ரத்த தானம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும், ஹீமோகுளோபினின் அளவு 12-க்கு மேலும் இருந்து, உடலில் எவ்விதமான நோய் பாதிப்புகளும் இல்லை என்றால், தாராளமாக ரத்த தானம் செய்யலாம். இயல்பாகவே, பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். மேலும், மாதவிலக்கு காலத்தில்  பெண்கள் ரத்த தானம் செய்யக் கூடாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மற்றபடி, ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், தாராளமாக ரத்த தானம் செய்யலாம். இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்