கன்சல்ட்டிங் ரூம்

 

ரகுபதி, திருவண்ணாமலை.

“என் வயது 20. நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் முன் பல் உடைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பல் வேரில் தொற்று ஏற்பட்டதால், வேர்சிகிச்சை (Root canal) செய்துகொண்டேன். தற்போது, மீண்டும் பல்லில் துளை ஏற்பட்டு உள்ளது. மீண்டும் வேர் சிகிச்சை செய்ய வேண்டுமா? உடைந்த பல்லில் கேப் போட்டுக்கொள்வது நல்லதா?

டாக்டர் செந்தில்குமார், பல் சீரமைப்பு நிபுணர், புதுச்சேரி.

“பல் உடைந்தால், பல்லின் நரம்புகள் வெளியே தெரியும். இதனால், கிருமித் தொற்று ஏற்பட்டு, வேர் பாதிப்படையும். அதை, மூடி சீல் செய்யும் சிகிச்சை செய்துவிட்டால், பல்லின் வேர் பாதிப்படையாது. இதன்மேல் கேப் போட்டுக்கொள்ளலாம். பல் வேர் சிகிச்சை மட்டும் செய்து, மீண்டும் துளை ஏற்பட்டிருந்தால், பல்லை ஸ்கேன்செய்து பார்க்க வேண்டும். பல் வேரிலோ அது பொருத்தியுள்ள எலும்பு அல்லது ஈறுகளிலோ பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், சிகிச்சை அளித்து அதன்மேல், கேப் போட்டுக்கொள்ளலாம். இயற்கையான பல்லைக் காப்பாற்ற முடிந்தால் அதுவே சிறந்தது. பல்லைக் காப்பாற்ற முடியாத நிலையில், அதனை எடுத்துவிட்டு, செயற்கைப் பல் பொருத்திக்கொள்ளலாம். பல் உடைந்தவர்கள், பல் ஈறுகளில் வீக்கம் அல்லது சீழ் பிடித்தல் போன்றவற்றைக் கவனிக்காமல்விடக் கூடாது. இது மிக ஆபத்தானது. எனவே, உடனடியாக பல் மருத்துவரை அணுகி என்ன பாதிப்பு என்று கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.

பொதுவாக, விபத்துகளில் பல் முழுமையாக வெளியே வந்துவிட்டால், அந்தப் பல்லை 10 அல்லது 12 மணி நேரத்துக்குள் பல் மருத்துவமனைக்குக்கொண்டு வந்துவிட வேண்டும்.  விழுந்த பல்லைப் பாலிலோ, தண்ணீரிலோ போட்டு எடுத்து வர வேண்டும். பாலில் போட்டு எடுத்து வருவது சிறந்தது. இப்படிச் செய்தால், அதே பல்லை மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.”

சு.பாபு, சிவகங்கை.


“என் வயது 57. நான் இரண்டு வருடங்களுக்கு முன் குடல் இறக்கத்தால் அவதிப்பட்டேன். அதற்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். மருந்துகள் எல்லாம் சரியாகத்தான் எடுத்துவருகிறேன். இப்போது மீண்டும் அங்கு வலிக்கிறது. இதற்குக் காரணம் என்ன?”

டாக்டர் ரமேஷ், குடல் அறுவைசிகிச்சை நிபுணர், காரைக்குடி.   

“பொதுவாக நெஞ்சு சளி, பலத்த இருமல், மலச்சிக்கல், அதிக பளுவைத் தூக்குதல் போன்ற காரணங்களால்தான் குடல் இறக்கம் ஏற்படுகிறது. இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் வலி என்று நீங்கள் கூறுவதால், உங்களுக்குக் குடலில் வலை வைத்து அறுவைசிகிச்சை செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், வலை வைக்காத சாதாரண அறுவைசிகிச்சையே பலருக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. கடுமையான வலி குடலிறக்கத்துக்கான அறிகுறி. உங்களுக்கு மீண்டும் வலி இருப்பதால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பொதுவாக, சரிந்த குடலை எடுத்துச் சரியான இடத்தில் வைத்து, மீண்டும் சரியாதவாறு தையல் போடுவோம். நோயாளியின் கவனக்குறைவால் மீண்டும் குடல் சரியும்பட்சத்தில், அவர்களின் விருப்பத்துக்கு இணங்க, வலையை வைத்துக் குடலை கீழே இறங்காதவாறு தைப்போம். அந்த வலையில் பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் அறுவைசிகிச்சை செய்வது கடினம். ஆனால், வலையில் பாதிப்பு ஏற்பட 0.1 சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. முற்றிய நிலையில் குடல் சரிந்து, விதைப்பைக்கு அருகே சென்றுவிடும். அப்போது கடுமையான வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கச் சிரமமாக இருக்கும். இவர்கள் கடினமான வேலைகள் செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சைக்கிள், இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்