நலம் தரும் நிலவேம்பு

சித்த மருத்துவத்தில் ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியபோது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது நிலவேம்பு. சிறு செடி வகையைச் சேர்ந்த இதற்கு, காண்டம், காண்டகம், கோகனம், கிராதம் போன்ற பல பெயர்கள் உள்ளன.  நிலவேம்பில் சீமை நிலவேம்பு, நாட்டுநிலவேம்பு என இரண்டு வகைகள் உள்ளன. சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

*நிலவேம்பின் எல்லா பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையவைதான். எனினும், இலையும் தண்டும் அதிக அளவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

*வாதசுரம் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல், நீர்க்கோவை, மூக்கடைப்பு ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் நிலவேம்புக்கு உண்டு.  நிலவேம்பு  இலையைப் பொடித்து, 15 கிராம் எடுத்து, இதனுடன், கிச்சிலித்தோல், கொத்தமல்லி தலா சுமார் 200 மி.கி சேர்த்து, வெந்நீரில் கலக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, வடிகட்டி 15  - 30 மி.லி அளவுக்கு நாள்தோறும் இரண்டு மூன்று முறை குடித்துவர, நிவாரணம் கிடைக்கும்.

*நிலவேம்புச் செடியை முதன்மை பொருளாகக்கொண்டு சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்படும் நிலவேம்புக் குடிநீர், டெங்கு காய்ச்சல் மற்றும் மூட்டுக்களைப் பாதித்து, தாங்கமுடியாத வலியை உண்டாக்கும் சிக்குன்குனியா ஆகிய இரண்டு காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து.

*டெங்கு சுரம், சிக்குன்குனியா மற்றும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, அவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது நிலவேம்புக் குடிநீர் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

*நிலவேம்பைப் பொடித்து, 34 கிராம் எடுத்து, 700 மி.லி வெந்நீரில் கலந்து, கிராம்புத்தூள், கருவாப்பட்டைத்தூள், ஏலப்பொடி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நான்கு கிராம் கலந்து, சுமார் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் 15-30 மி.லி அளவுக்கு தினமும் பருகிவர, முறைசுரம், குளிர்சுரம், மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பு, அஜீரணம், வயிற்றுப்புழுக்கள் நீங்கி, உடலுக்கு வலிமை கிடைக்கும்.

*நிலவேம்பு இலையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, குடிநீர் செய்து, குடித்துவர கல்லீரல் தளர்ச்சி, நரம்புவலி, அஜீரணம், குடல் பொருமல் நீங்கும்.

- பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick