கன்சல்டிங் ரூம்

ஹெல்த்

எம்.எஸ்.வீரராகவன், திருச்செங்கோடு.

“என் மகனுக்கு வயது 15. அவனுக்குத் திடீரென இரண்டுமுறை மூக்கில் இருந்து ரத்தம் கசியும் பிரச்னை ஏற்பட்டது. மூக்கில் ரத்தம் வடிவது எதனால்? இதற்கு என்ன மாதிரியான முதலுதவி செய்வது? தீர்வு என்ன?”

டாக்டர் நாகேஷ்வரன்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர், மதுரை.


“முகத்தில் மூக்கின் அமைவிடத்தின் காரணத்தால், மூக்கிலிருந்து ரத்தம் வருவது  இயல்பான பிரச்னையே. ஏனெனில், மூக்கின் உட்புறம் நிறைய ரத்தக்குழாய்கள் உள்ளன. மூக்கின் உட்புறச்  சவ்வுகள் உலர்ந்து போவதாலும் பலவீனம் அடைவதாலும் சிலர் மூக்கை விரலால் நோண்டிக்கொண்டே இருப்பதாலும் ரத்தம் கசிகிறது. பொதுவாக, குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவருக்குமே  சில சமயங்களில் மூக்கில்  ரத்தம் வடியும். குழந்தைகளுக்குச் சளிப் பிடிக்கும்போது, மூக்கில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், அவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிகிறது. இது இயற்கையாகவே குழந்தைகளுக்கு ஏற்படும். பெரியவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, மூக்கில் இருந்து ரத்தம் வடியும். வயதானவர்களுக்கு மூக்கில் கட்டி ஏற்பட்டாலோ அல்லது சதை வளர்ந்தாலோ ரத்தம் வடியும்.

மூக்கில் ரத்தம் வரும்போது தலையை உயர்த்தக் கூடாது. இதனால், ரத்தம் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்ல நேரிடும். இதனால், ரத்தத்தின் சுவை சிலருக்கு ஒவ்வாமையாகி வாந்தியை ஏற்படுத்தும். சிலருக்கு, புரையேறி ரத்தம் நுரையீரலுக்குச் சென்றுவிடக் கூடும். மூக்கின் இரு துளைகளையும் விரல்களால் மூடியபடி, தலையைக் கீழே கவிழ்த்து, வாய் வழியாக மூச்சை விட வேண்டும். இதைச் செய்தாலே ரத்தம் வருவது நின்றுவிடும். ஐஸ்கட்டி இருந்தால் அதை மூக்கில் வைக்கலாம். அதன்பின் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick