கன்சல்டிங் ரூம்

ஹெல்த்

கே. அனிதா, செங்கல்பட்டு

நான் 6 மாதக் கர்ப்பிணி. வயிற்றுப் பகுதியில் கடுமையான அரிப்பு இருக்கிறது. குழந்தைக்கு முடி அதிகமிருந்தால் இப்படித்தான் அரிக்கும் என்கிறார்களே, அது உண்மையா? அரிப்பைக் கட்டுப்படுத்த என்ன வழி? சொரிந்துவிட்டால் தழும்புகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?

அகிலாஸ்ரீ,மகப்பேறு மருத்துவர்

‘’பொதுவாகப் பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஐந்து மாதங்களுக்கு மேல் வயிற்றுப் பகுதியின் சருமப் பகுதி விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். அப்போது, ஒரு மாதிரியான நமைச்சல் உருவாகி, அரிப்பு ஏற்படும். இதுதான் காரணமே தவிர, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முடி அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை. சில பெண்கள் ஆறாவது மாதத்திலும், சிலர் எட்டாவது மாதத்திலும் இந்த அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளித்துவிடலாம். இதனால் அரிப்பு, தழும்பைத் தவிர்க்கலாம். அரிப்பெடுக்கும் நேரங்களில் மேலே சொன்ன எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவியும் வரலாம். சிலருக்குப் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். எனவே, அரிப்பு எடுக்கும்போது மருத்துவரிடம் காட்டி அதற்கான தீர்வைத் தேடுங்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick