களைப்பைக் களைவோம்! | Feeling tired all the time? Reasons and solutions - Doctor Vikatan | டாக்டர் விகடன்

களைப்பைக் களைவோம்!

சபீனா, பொது மருத்துவர்

சோர்வு... இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து, அதனால் அதீதச் சோர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில், பலரும் எப்போதும் சோர்வாகவே காணப்படுகின்றனர். கடுமையானது (Acute) மற்றும் நாள்பட்டது (chronic)  எனச் சோர்வில் இரண்டு வகைகள் உண்டு. இதை மருத்துவ ரீதியாக ஆங்கிலத்தில் fatigue எனக் கூறுவார்கள்.

கடுமையான சோர்வு என்றால் சிறிது காலம் ஏற்படுவது. அதாவது, அதிக வேலை செய்வதாலோ பயணம் செய்வதாலோ தற்காலிகமாக ஏற்படக்கூடியது. நாள்பட்ட சோர்வு என்பது நீண்டகாலமாகச் சோர்வாக இருப்பது. இதற்கு முறையாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

சோர்வு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்

* அஜீரணக் கோளாறு, கால்சியம் குறைவால் இரவில் காலில் வரக்கூடிய தசைவலி, உயர் ரத்த அழுத்தத்தால் வரும் தலைவலி, சர்க்கரை நோயால் இரவில் இரண்டு, மூன்று முறை சிறுநீர் கழிக்க நேர்வது ஆகியவை அலுப்பிற்கான முக்கியமான காரணங்களாகும்.

மனஅழுத்தம்.

போதுமான அளவு தூக்கம் இல்லாதவர்களுக்கும் இரவு நேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் அதிகளவு சோர்வு ஏற்படுகிறது.

சில மருந்துகளை உண்பதால் சிலருக்குச் சோர்வு ஏற்படும். காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றுக்காக உட்கொள்ளும் மாத்திரைகள் அதிகளவு சோர்வை ஏற்படுத்தக்கூடியவை.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமலிருத்தல்; அதேநேரத்தில் ஜங்க் உணவுகளான பர்கர், பீட்சா மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது.

ரத்தச்சோகை மிக முக்கியக் காரணமாகும். குறிப்பாக, மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு, அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick