கன்சல்ட்டிங் ரூம்

``எனக்குக் கர்ப்பப்பையில் கட்டி ஏற்பட்டது. அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிட்டேன். இது நடந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனாலும், அவ்வப்போது வயிற்றில் ஒரு வலி உண்டாகிறது. வீட்டு வேலைகளை அதிகமாகச் செய்யும் நாள்களில் கூடுதலாக வலி எடுக்கிறது. இதற்கு என்ன காரணம்?’’

- ரேவதி ராகவன், சென்னை-44.


``பொதுவாகவே ஒருவர் ஆபரேஷன் செய்துகொண்டால், அதன் பாதிப்பாக அந்தப் பகுதியில் வலி இருக்கும். வலி சில மாதங்கள் வரை தொடரலாம். ஆனால், ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகெல்லாம் வலி எடுக்காது. ஒருவேளை, உங்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அப்போது செய்யப்பட்ட ஆபரேஷனின் தாக்கமாக இந்த வலி ஏற்பட்டிருக்கும்; அல்லது, இது வேறு ஏதாவது உடல்நல பாதிப்பின் காரணமாக  இருக்கும். உதாரணமாக நீர்க்கட்டி, பித்தப்பையில் கல், அல்சர் முதலிய சில பிரச்னைகளாலும் வலி எடுக்கலாம். அதனால் உடனடியாக முழுப் பரிசோதனை ஒன்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்துகொண்டு, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.’’

``என் மகனுக்கு வயது 25. மீன், நண்டு போன்ற கடல் உணவுகளைச்  சாப்பிட்டால் சிறிது நேரத்தில் தலைச்சுற்றல் வந்துவிடுகிறது.  மூச்சுவிடுவதிலும் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறான். இதற்கு என்ன காரணம்? எப்படிச் சரிசெய்வது?’’

- செந்தில் கந்தன், பரமக்குடி.


``உங்கள் மகனுக்கு ஏற்பட்டிருப்பது Type - 1 Hypersensitivity or Anaphylaxis என்கிற ஒவ்வாமை. இது உணவு மாற்றத்தால், புகையைச் சுவாசிப்பதால், மருந்து உட்கொள்வதால், ஊசி போடுவதால், க்ரீம் போன்றவற்றை நேராக உடலில் உபயோகிப்பதால் ஏற்படும் ஒரு வகை பிரச்னை. உங்கள் மகனுக்கு உணவு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக ஓர் உணவைச் சாப்பிட்டால், சில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு. குறிப்பாக, சிக்கன், மீன், இறால் போன்ற உணவுகளை உட்கொள்ளும்போது நம் உடலில் இது போன்ற ஒவ்வாமை ஏற்படும். இதற்குக் காரணம், ஒவ்வாமைக்கு எதிராக உடலில் உற்பத்தியாகும் IgE என்ற எதிர்ப் பொருள் (Antibody). ஆரம்பத்தில் முகம் வீங்குதல், உடலில் தடிப்பு தடிப்பாக ஏற்படுதல், குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, வியர்த்துக் கொட்டுதல், படபடப்பு, பயம் ஆகிய பிரச்னைகள் உண்டாகும். நாளாக ஆக, மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். இந்த ஆரம்பகால அறிகுறிகள் எல்லாமே ஒருவருக்குத் தோன்றும் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் தென்பட்டால், சிறிய பிரச்னை எனக் கருதி விட்டுவிட வேண்டாம். இந்த அறிகுறிகளை ‘உடனே அறிகுறி தோன்றுதல்’ (Immediate phase), ‘சில மணி நேரம் கழித்துத் தோன்றுதல்’ (Late phase)  என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  ஆரம்பகால அறிகுறி ஏற்பட்டவுடனேயே அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுச் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல, ஓர் உணவைச் சாப்பிட்டவுடனேயே ஒவ்வாமைக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தோன்றினால், இது உடலுக்கு ஒவ்வாதது எனப் புரிந்துகொண்டு அதைத் தவிர்ப்பது மிக நல்லது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick