கன்சல்ட்டிங் ரூம் | Consulting room - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கன்சல்ட்டிங் ரூம்

அ.ச.ரசூல், சென்னை-4.

``எனக்கு வயது 50. இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு, கடந்த ஆண்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இப்போது ஆஸ்பிரின் மாத்திரையை, தேவைப்படும்போது சாப்பிட்டுவருகிறேன். இரவு நேரங்களில் திடீரென்று இதயம் வேகமாகத் துடிக்கிறது. கீழ்த்தாடை வலிக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன ?’’

டாக்டர் மாதவன், இதய அறுவைசிகிச்சை நிபுணர், மதுரை.


``பொதுவாக ஆண்களுக்குத்தான் இதயநோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களாலேயே இதயம் தொடர்பான நோய்கள் இளம் வயதுடையவர்களுக்குக்கூட ஏற்படுகின்றன. உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், வாழ்நாள் முழுவதும் ஆஸ்பிரின் மாத்திரையையோ அல்லது அதற்கு இணையான மாத்திரையையோ இதயநோய் நிபுணர் ஆலோசனைப்படி தினமும் உட்கொள்ளவேண்டும். திடீரென்று இரவு இதயம் வேகமாகத் துடிக்கிறது என்றால், ஆஞ்சியோகிராம் பரிசோதனையையும், தொடர்ந்து 24 மணி நேரமும் இ.சி.ஜி எடுத்துக்கொள்ளும் ஹோல்டர் மானிட்டரிங் பரிசோதனையையும் (Holter monitoring test) உடனடியாகச் செய்துகொள்ள வேண்டும். இதன் முடிவுகளைப் பொறுத்து, ‘எலெக்ட்ரோ பிஸியாலஜி’ (Electrophysiology) பரிசோதனையும் செய்துகொள்ளலாம். ரத்தக்குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், கீழ்த்தாடை வலி ஏற்படும். எனவே, தாமதிக்காமல் இதய மருத்துவரை அணுகுவது நல்லது.”

பி.கே.சிவகாமி, தர்மபுரி.

“எனக்கு வயது 42. மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்தேன். அப்போது, எலும்பு அடர்த்திக் குறைவாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். இதற்கு, கால்சியம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். எலும்பு அடர்த்தியை அதிகரிக்க, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?”

டாக்டர் ஃபிரான்சிஸ் ராய், எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், திருநெல்வேலி.

``எலும்பு அடர்த்திக் குறைவு, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் பாதிக்கிறது. 40 வயதுக்குப் பின்னர் ஹார்மோன்கள் சமச்சீரின்மை ஏற்படுவதால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், எலும்புகள் அடர்த்திக் குறைந்து, எளிதில் உடையும்  நிலைக்கு உள்ளாகின்றன. மேலும், எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உங்களுக்கு என்ன மாதிரியான பரிசோதனை செய்து, எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளது என்று கண்டறிந்தார்கள் என்பது தெரியவில்லை. டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலமாக எலும்பு அடர்த்தி குறித்த துல்லியமான முடிவுகளைப் பெற முடியும். டெக்ஸா ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனையின்படி, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், காலை உடற்பயிற்சி, தினமும்
20 நிமிடங்கள் சூரிய ஒளிக் குளியல், மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick