அட்ரினல்... அற்புத சுரப்பி!

மிகவும் சிக்கலான தருணம்... இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது, கையில் வியர்க்கிறது. தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா என்று கண்கள் அங்கும் இங்கும் பார்க்கின்றன. அந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க அல்லது பிரச்னையை எதிர்கொள்ள உடலும் மனதும் தயாராகின்றன. இந்த அத்தனை செயல்பாடுகளும் மிகச் சில விநாடிகளில் நடந்துமுடிகின்றன. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அமைதியாக, வேறு மனநிலையில் இருந்த உடலும் மனமும் எப்படி திடீரென்று தன்னை மாற்றிக்கொண்டன என்று யோசித்தது உண்டா? இந்த அத்தனைக்கும் அட்ரினல் சுரப்பியில் இருந்து வரும் ஹார்மோன்தான் காரணம். ஆபத்தில் உதவும் நண்பனாக இருக்கும் இந்த ஹார்மோன், அளவுக்கு அதிகமாகச் செயல்படும்போது உடலில் சில பாதிப்புகளையும் உருவாக்கிவிடுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேல் ஒரு தொப்பி போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளன அட்ரினல் சுரப்பிகள். `அட்ரினல்’ என்ற வார்த்தைக்கு, `சிறுநீரகத்துக்கு அருகில்...’ என்று பொருள். இக்கட்டான சூழலின்போது, மைய நரம்பு மண்டல நியூரான்கள் அட்ரினலைத் தூண்டுகின்றன. உடனே, அட்ரினலின் சுரந்து மிக வேகமாக ரத்தம் மூலமாக உடல் முழுவதும் பயணித்து, உடல் உறுப்புகளை, பிரச்னையை எதிர்கொள்ளத் தயார் செய்கிறது.

உடன் மூச்சுக்குழாய் விரிவடைந்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கச் செய்கிறது. ரத்தக் குழாய்களைச் சுருக்கி, தசைகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்கிறது. இதனால்தான், நம்முடைய இதயம் அதிவேகமாக துடிக்கிறது, சுவாசம் பலமாகிறது. இந்த நேரத்தில், உடலில் உள்ள வலிகூட நமக்குப் பெரியதாகத் தெரியாது. இதனால்தான், காயம் ஏற்பட்டாலும்கூட தப்பி ஓடும் அவசரத்தில் வலி நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய வலிமை அதிகரித்திருப்பதையும் யாரையும் எதையும் எதிர்கொள்ளும் திறன் வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம். தப்பிப் பிழைத்து ஓடிவந்தாலும் சரி, இந்த அட்ரினலின் விளைவு சில மணி நேரங்களுக்குத் தொடரும்.

தவிர, உடலில் தாதுஉப்புக்கள் அளவை கட்டுக்குள்வைக்க, உடலில் நீர் அளவைக் கட்டுக்குள்வைக்க ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல் மட்டும் இல்லை என்றால், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்களை கட்டுப்பாடு இன்றி சிறுநீரகம் வெளியேற்றி, ரத்த அழுத்தத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். தண்ணீர் அளவு குறைவதால், டீஹைட்ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலும், ஆன்ரோஜன்  (androgen) என்கிற பாலியல் ஹார்மோனையும் சிறிதளவு சுரக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick