ஸ்டார் ஃபிட்னெஸ் - அரை வயிற்றுச் சாப்பாடு... அதிகம் பேசாத அமைதி...

நடிகர் விஜயின் ‘என்றும் இளமை’ சீக்ரெட்ஸ்

43வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் தற்போது 61வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதே ஸ்லிம், ஸ்பிரிங் உடம்பும் இளமையுமாக வலம்வருவது விஜய் ஸ்பெஷல். இந்த இளமையைத் தக்கவைத்துக்கொள்ள அவர் என்னவெல்லாம் செய்கிறார்?

படப்பிடிப்பு என்றால் அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். வீட்டிலேயே உள்ள ஜிம்மில் அரைமணிநேர ஜாகிங் அல்லது ட்ரெட்மில் வாக்கிங்.  இது வார்ம்அப் பயிற்சி மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உடற்பயிற்சியுமே அவ்வளவுதான். அதிகாலையிலேயே படப்பிடிப்புத் தளத்தில் இருக்க வேண்டும் என்றால் காலையில் விட்ட நடைப்பயிற்சியை ஷூட்டிங் முடித்து வந்ததும் மாலையில் மறக்காமல் முடித்துவிடுவார்.

மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை, இவ்வளவுதான் விஜயின் காலை உணவு. மதியம் சிக்கன் பிளஸ் சப்பாத்தி. அதுவும் சப்பாத்தி குறைவாகவும் சிக்கன் அதிகமாகவும் இருக்க வேண்டும். சைவ உணவென்றால் காய்கறி பிளஸ் சப்பாத்தி. இந்த காம்பினேஷனிலும் சப்பாத்தி குறைவாகவும் காய்கறிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். மட்டனைத் தொட மாட்டார். நொறுக்குத்தீனிக்கு எப்போதும் நோதான்!
‘வயிற்றை நிரப்பாதே’ - இதுதான் விஜய்யின் டயட் மந்திரம். எவ்வளவு பசித்தாலும் எவ்வளவு ருசித்தாலும் அரை வயிற்றுக்குமேல் சாப்பிடவே மாட்டார். மாலையில் ஃப்ரூட் சாலட் கட்டாயம். பிறகு டீ, காபி, சூப் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று. கூடவே கொஞ்சம் பிஸ்கட். இரவு மீண்டும் இட்லி, தோசை. ஆனால் ஏழு மணிக்குள் சாப்பாட்டை முடித்துவிட்டு 10 மணிக்குள் தூங்கச் சென்றுவிடுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick