மாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கு.கணேசன், பொதுநல மருத்துவர்

ண் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறது. பசி குறைந்துவிட்டது. வாந்தி வருகிறது. இந்த அறிகுறிகள் தோன்றினாலே, அது மஞ்சள் காமாலையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், எல்லோரும் நினைக்கிற மாதிரி  மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; அது ஓர் அறிகுறி மட்டுமே!

காமாலை எப்படி ஏற்படுகிறது?

கல்லீரல் பித்தநீரைச் (Bile) சுரக்கிறது. இது கொழுப்பு உணவு செரிமானத்துக்கு உதவுகிறது. இதன் நிறம் மஞ்சள். காலாவதியாகிப் போன ரத்தச் சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் (Spleen) சாகடிக்கப்படுகின்றன. அப்போது ஒவ்வொரு ரத்த அணுவும் ஹீம் (Haeme), குளோபின் என இரண்டாக உடைகிறது. ஹீமிலிருந்து ‘பிலிருபின்’ (Bilirubin) என்ற ‘பித்த நிறமி’ தினமும் 300 கிராம் வரை உற்பத்தியாகிறது. இதன் நிறமும் மஞ்சள். இது ஒரு விஷப் பொருள். இதே அளவில் இது ரத்தத்தில் தங்கினால் உயிருக்கு ஆபத்து. எனவே, இதைப் பித்தநீருடன் கலக்கிறது, கல்லீரல். இதனால் பித்தநீர் மஞ்சள் நிறமாகிறது.

பித்தநீர் குடலுக்குச் செல்லும்போது அதனுடன் பிலிருபினும் சேர்ந்து சென்று, பித்த உப்பாக மாறி மலத்தில் வெளியேறுகிறது. மிச்சமுள்ளது ரத்தம் வழியாகச் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறுகிறது. இம்மாதிரியான சுத்தப்படுத்தும் சுழற்சியால் பிலிருபினின் அளவு 0.2 - 0.8 மி.கி./ டெசி லிட்டர் என அடங்கிவிடுகிறது. அதேநேரம் கல்லீரலில் நோய்த்தொற்று, புற்று, பித்தநீர்ப் பாதையில் கல் அடைப்பு என்பன போன்ற காரணங்களால் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகரித்துவிடும். அப்போது பாதிக்கப்பட்ட அந்த நபர்களுக்குக் கண், நகம், சிறுநீர் எல்லாமே மஞ்சளாகத் தெரியும். இதுதான் ‘மஞ்சள் காமாலை’!

காமாலை வகைகள்

காமாலையில் பல விதம் உள்ளது. ‘தொற்றுக் காமாலை’ (Infective jaundice) முதல் வகை. இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் வருகிறது. ஹெபடைட்டிஸ் - ஏ மற்றும் பி வகை காமாலைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். ‘ரத்த அழிவுக் காமாலை’ (Haemolytic jaundice) என்று ஒரு வகை இருக்கிறது. ரத்தச் சிவப்பணுக்கள் அளவுக்கு மீறி அழிந்து போவதால் வருகிற காமாலை. ரத்தவகை ஒவ்வாமை, கடுமையான மலேரியா, தலசீமியா போன்ற நோய்களின்போது இது ஏற்படுகிறது.

‘அடைப்புக் காமாலை’ (Obstructive jaundice)  என்று இன்னொரு வகை இருக்கிறது. கல்லீரலில் சுரக்கிற பித்தநீர் பித்தப்பைக்கு வந்து சிறிதுநேரம் தங்குகிறது. பிறகு, பித்தக்குழாய் வழியாக முன் சிறுகுடலுக்கு வந்து சேருகிறது. இந்தப் பாதை சரியாக இருந்தால்தான் பித்தநீர் குடலுக்கு வந்து கொழுப்பு உணவைச் செரிக்கும். சில சமயங்களில் இந்தப் பாதை அடைத்துக் கொள்ளும், அப்போது பித்தநீர் ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரும். இதுதான் அடைப்புக் காமாலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick