பரதம் கூட வொர்க்அவுட்தான்! - ஷிவதா ஃபிட்னெஸ் ரகசியம் | Fitness Stars - Sshivada - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பரதம் கூட வொர்க்அவுட்தான்! - ஷிவதா ஃபிட்னெஸ் ரகசியம்

ஸ்டார் ஃபிட்னெஸ்ஃபிட்னெஸ்

‘நெடுஞ்சாலை’, ‘ஸீரோ’ படங்களுக்குப் பிறகு சமீபத்தில் வெளிவந்த ‘அதே கண்கள்’ படம் மூலம் மீண்டும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் ஷிவதா. மாடர்ன், கிராமம் என எந்தக் கதாபாத்திரத்திற்கும் பொருந்தும்படியான உடலமைப்பு.  ‘அதே கண்களில்’  இடைவேளை வரை சாந்தமாக இருப்பவர், இடைவேளைக்குப் பின் சடாரென வேறு ஆளாக மாறிவந்து நிற்பார். ஃபிட்டான உடல், தீர்க்கமான பார்வை என அந்தக் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தும் அனைத்து அம்சங்களும் இவரிடம் உள்ளன. ஒரு காட்சியில், காலை உயர்த்தி ஹீரோவை நெஞ்சில் உதைப்பார். ‘அவ்வளவு மென்மையாக வந்து போனவரா இப்படி’ என்று சந்தேகம் கொள்ள வைக்காமல், அத்தனையும் நம்பும்படியாக இருப்பதற்கு அவரது உடலமைப்பு முக்கியப்பங்கு வகித்திருக்கும்.

“சொல்லுங்க... எந்த ஜிம்..? டெய்லி எவ்வளவு நேரம் பயிற்சி?” எனக் கேட்டேன்.

“ஜிம்மா? நீங்க வேற... ஃபிட்டா இருக்கிறதுக்காக ஜிம்முக்குச் செல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் அடிப்படையில் பரதம் கற்றுக்கொண்டவள். சின்ன வயசில் இருந்தே தொடர்ச்சியா பரதம் ஆடிக்கிட்டு இருக்கேன். இடையில் கொஞ்ச நாள் பயிற்சியைத் தொடர முடியவில்லை. அந்த இடைவெளியில், உடலளவில் சில மாறுதல்களை உணர முடிஞ்சது. உடனடியாகப் பழையபடி பரதத்துக்கே திரும்பிவிட்டேன். பரதம்தான் என்னுடைய வொர்க்அவுட். கூடவே, யோகாவும் செய்வேன். பரதம் என்றில்லை. உடலைப் பராமரிக்க நாம செய்கிற எந்தப் பழக்கத்தையும் திடீரென்று நிறுத்துவது தப்புனு சொல்லுவேன். அதிக நேரம் ஒதுக்க முடியலைன்னாலும், கொஞ்ச நேரமாவது அந்தந்தப் பயிற்சிகளைத் தொடரவேண்டும். திடீரென்று ஒரு விஷயத்தை நிறுத்துவது நம் உடலின் எடையைக் கூட்டிக் குறைத்து ஷேப்லெஸ் ஆக்கிவிடும்.
 
உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க, நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ரொம்ப முக்கியமானவை. நான் அதிகமா சாப்பிடமாட்டேன். நொறுக்குத் தீனியை முடிந்த அளவு தவிர்த்திடுவேன். சைவ உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுவேன். எப்போதாவது மீன் சாப்பிடுவேன். என்னுடைய சாப்பாட்டு ‘டைம் டேபிள்’ கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். மூன்று வேளையாக, ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் ஐந்து வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவேன். என்னதான் பசி இருந்தாலும் அளவுக்கு அதிகமா சாப்பிடறதோ, பசி இல்லைன்னு சாப்பிடாமலே இருக்கிறதோ... இரண்டையுமே பண்ண மாட்டேன். உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

நான் இருப்பது சினிமா ஃபீல்ட்... காலை 9 முதல் மாலை 6 மணி ஆஃபீஸ் வேலை மாதிரி எதையும் நான் தீர்மானிக்க முடியாது. எந்த டைம் ஷூட்டிங், நமக்கு என்ன வேலை இருக்கும் என்பதைக் கதைதான் தீர்மானிக்கும். ‘அதே கண்கள்’ சமயத்தில் நைட் ஷூட் அதிகமா இருந்தது. அந்தமாதிரி நேரத்தில் நடிப்பதற்கு நிச்சயம் எனர்ஜி வேண்டும். அதற்காக அதிகமாகச் சாப்பிட்டா சீக்கிரம் சோர்ந்துபோயிடுவோம். நாம் உட்கொள்ளும் உணவு நமக்கு எனர்ஜியைத் தரவேண்டுமே தவிர, தூக்கத்தை வரவைக்கக்கூடாது. தூக்கம் வந்து, சோர்ந்துட்டா அதை நம் கண் காட்டிக்கொடுத்துவிடும். இப்படி நிறைய விஷயம் இருக்கு. அதனால் வீட்டில் இருந்து நிறையப் பழங்களை எடுத்துக்கிட்டுப் போய் சின்ன இடைவெளிகளின்போது சாப்பிடுவேன். பழங்கள் எப்பவும் எனர்ஜியைக் கொடுக்கும், மற்ற உணவுகள் மாதிரி அசதியைக் கொடுக்காது.

இதை எல்லாம் தாண்டி ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கிற இன்னொரு விஷயம் இருக்கு... அதுதான் ‘ஸ்ட்ரெஸ்’. எந்த வேலைன்னாலும் அதில் ஸ்ட்ரெஸ் வரத்தான் செய்யும். நான் ரொம்ப எமோஷனல் வேற. சின்னச் சின்ன விஷயங்கள் கூட மனதளவில் என்னைப் பாதிச்சிடும். அந்த மாதிரி மனரீதியான விஷயங்களை டீல் பண்றதுக்கு மனசு விட்டுப் பேசிடுவேன். அம்மா, அப்பா, என்னுடைய கணவர்னு யார்கிட்டயாவது சொல்லிடுவேன். அது, உடனடியா எனக்கு ரிலீஃப் தரும். ஏன்னா, உடல் ஆரோக்கியமா இருக்கிறதோட சேர்த்து, மனசை ஆரோக்கியமா வெச்சிருக்கிறது ரொம்ப முக்கியமான விஷயமில்லையா!”

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick