கன்சல்டிங் ரூம்

ஹெல்த்

அஸ்வின், தர்மபுரி.

“என் வயது 24. எனக்குப் புகைப்பழக்கம் இருக்கிறது. அதை நிறுத்த நினைக்கிறேன்.  ஆனால் நண்பர்கள் இ-சிகரெட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இ-சிகரெட் என்றால் என்ன? அதற்கும் சாதாரண சிகரெட்டுக்கும் என்ன வித்தியாசம்? அதை எடுத்துக்கொள்வது சரியா?  புகைப்பழக்கத்தை நிறுத்த வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா?”

டாக்டர் உமாசங்கர், நெஞ்சக நோய் மருத்துவர், ஈரோடு.


“இ-சிகரெட் என்பது எலெக்ட்ரானிக் சிகரெட். பீடி, சிகரெட் போன்றவற்றில் இருக்கும் ஹைட்ரோ கார்பன்ஸ், நைட்ரஸ் அமைன் போன்ற அபாயகரமான வேதிப் பொருள்களில் இருந்து விடுபடுவதற்காகக் கண்டுபிடிக் கப்பட்ட எலெக்ட்ரானிக் சாதனம் இது. சிகரெட் தரும் போதையை அதன் அபாயகரமான விளைவுகள் இன்றி கொடுக்கிறது என்பதால், புகையின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்தப் பழக்கத்துக்கு மாறுகின்றனர் சிலர். ஆனால், இதிலும் வேதிப் பொருள்கள் இருக்கின்றன. இ-சிகரெட் உபயோகித்தாலும் நிச்சயம் உடல் நலம் பாதிக்கப்படும். சாதாரண பீடி, சிகரெட் அளவுக்கு இல்லாவிடினும் இதில் நிக்கோடின் உள்பட எண்ணற்ற வேதிப்பொருள்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன என்பதால், இவையும் தீங்கானவையே. இ-சிகரெட் உபயோகிப்பதற்குப் பதிலாக நிக்கோடின் மாத்திரை பயன்படுத்தலாம். ஆனால், அதை நீங்களாக எடுத்துக்கொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரையின்படி எடுத்துக்கொள்வது நல்லது. சிகிச்சை தேவைப்படுபவரின் வயது, உடல்நிலை, அவர் சிகரெட்டைப் பயன்படுத்தும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு எத்தனை மாத்திரைகள் தேவை என்று தீர்மானிப்பார். மேலும், அவருக்குத் தேவையான கவுன்சலிங்கும் அளிக்கப்படும். எனவே, முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டு பழக்கத்தில் இருந்து விடுபடுவதே நல்லது. நீங்களாக எதையும் முயற்சி செய்ய வேண்டாம்.”

ஜே.ரம்யா தேவி, நாகப்பட்டினம்.

“என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. திடீரென வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறான். டாக்டர் அவனுக்கு ஜியார்டியாசிஸ் (Giardiasis) பாதிப்பு என்கிறார். ஜியார்டியாசிஸ் என்றால் என்ன? இது ஏன் ஏற்படுகிறது? இதைத் தடுக்க முடியுமா?”


டாக்டர் பி.கண்ணன், குழந்தைகள் நல மருத்துவர், மதுரை.

“ஜியார்டியாசிஸ் எனப்படுவது குடலில் உருவாகும் நுண்ணிய ஒட்டுண்ணித் தொற்று. சிறுநீர், மலம் போன்றவை கலந்த சுத்தமற்ற கிணறு, ஏரி, குளம், ஆற்று நீரில் `ஜார்டியா’ எனும் நுண் கிருமி இருக்கும். இது, ஒரு செல் உயிரி வகையைச் சேர்ந்தது. சுகாதாரமற்ற நீரில் புழங்கும்போது, நமது உடலுக்குள் செல்லும் இந்த நுண்கிருமியால் ஏற்படும் பிரச்னையை ‘ஜியார்டியாசிஸ்’ என்கிறோம். இதனால், வயிற்று உப்புசம், வயிற்றுவலி, மலம் நுரைத்து வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, உணவில் இருந்து சத்துகளை முழுமையாகக் கிரகிக்க முடியாத நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, இந்தப் பிரச்னை மூன்று முதல் ஆறு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நீடித்தால், நீரிழப்பு ஏற்பட்டு, உடல் சோர்வு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், நீரை வடிகட்டி, காய்ச்சி அருந்த வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் புழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது.”

கே.பி.அண்ணாமலை, திருச்சி.

“35 வயதாகும் எனக்கு சமீபமாக உடல்வலி இருந்துவருகிறது. குறிப்பாக, முதுகுப் பகுதியில் அடிக்கடி வலி இருக்கிறது. தினமும் என் மகனை, உடலை மிதித்துவிடச் சொல்கிறேன். அப்படி செய்தால், நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி, அடிக்கடி உடலை மிதித்துவிடலாமா? இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?”

டாக்டர் டேனியல், எலும்பு மூட்டு மருத்துவர், கோவை.

“குழந்தைகளை மிதிக்கச் சொல்வது ஒருவிதத்தில் மசாஜ் செய்வதுபோலத்தான். எப்போதாவது ஒரு நாள்தான் வலி இருக்கிறது என்றால், இந்த முறையைப் பயன்படுத்தலாம். தவறு இல்லை. ஆனால், நாள்பட்ட வலியாய் இருந்தாலோ அதிக வலியாய் இருந்தாலோ மிதிக்கவிடச் சொல்லிக்கொண்டே இருப்பது நல்லது அல்ல. அது உடலில் ஏற்பட்டிருக்கும் ஓர் உபாதையை அலட்சியம் செய்வதாகவே இருக்கும். குழந்தைகளுக்கு உடலைக் குறித்து அதிகம் தெரியாது என்பதால், அவர்களிடம் மிதித்துவிடச் சொல்வது சரியானது அல்ல. ஏனெனில், தவறான இடத்தில் மிதிக்கும்போது அந்த இடம் பாதிப்படையலாம். மேலும், முதுகுத்தண்டுவடத்தில் பிரச்னை இருக்கும்போது மிதித்துவிடச் செய்தால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல, இணைப்புகளில் மிதிக்கும்போது பிசகிவிட்டாலும் பிரச்னையே. எனவே, ஓரிரு நாள்களுக்கு மேல் வலி இருந்தாலோ, அதிக வலி இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதுதான் பாதுகாப்பானது. இதுபோன்ற எளிய வைத்தியங்கள் பலன் தராது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick