எலும்பின் கதை! - 5 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

ஹெல்த்செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

கால்சியம் தாதுஉப்பு குறைந்தால் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படும் என்று பார்த்தோம். வைட்டமின் டி குறைந்தால் ஏற்படக்கூடிய ஆஸ்டியோமலேசியா பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?

வாசலில் கால் தடுக்கி கீழே விழுந்ததில், கால் எலும்பு முறிந்த ஒரு பெண்ணை சிகிச்சைக்காக  அழைத்துவந்தார்கள். ‘நான் தினமும் இரண்டு வேளை பால் குடிக்கிறேன், கால்சியம் சப்ளிமென்ட் எடுக்கிறேன்... எலும்பு ஸ்டிராங்கா இருக்கும்னு பார்த்தா, இப்படிச் சாதாரணமா விழுந்ததுக்கே எலும்பு முறிஞ்சிருக்கே' என்றார். ‘அடுத்தமுறை வரும்போது, வைட்டமின் டி அளவு ரத்தப் பரிசோதனை செய்துட்டு வாங்கம்மா' என்று அனுப்பினேன். அடுத்தமுறை வரும்போது ரிப்போர்ட்டை காண்பித்தார்... அதில், அவருக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருப்பதைக் காண்பித்து ஏன் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று விளக்கினேன்.

பலரும் இந்த பெண்ணைப்போலத்தான், பால், கால்சியம் சத்து மாத்திரை எடுத்தால் போதும் எலும்பு உறுதியாக இருக்கும் என்று நினைத்துக்கொள்கின்றனர். சிலர், அவர்களாகவே மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள். கால்சியத்தைக் கிரகிக்க, வைட்டமின் டி அவசியம் என்பதை மறந்துவிடுகின்றனர். இதனால், எலும்பு மென்மையாகி, மிக எளிதில் முறிகிறது.

ஆஸ்டியோபொரோசிசும், ஆஸ்டியோம லேசியாவும் ஒன்றில்லை. வீடு கட்டுகிறோம்... கட்டுமானத்திலேயே ஏற்படும் பிரச்னையைப் போன்றது ஆஸ்டியோமலேசியா. அதாவது, எலும்பு செல்கள் கட்டமைப்பு வளர்ச்சியில் குறைபாடு காரணமாக எலும்பு மெலிந்துவிடுகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் என்பது கட்டிமுடித்த சுவரில் இருந்து செங்கற்கள் உதிர்ந்துவிழுவதைப் போன்றது. ஏற்கெனவே, கட்டமைக்கப்பட்ட எலும்பின் உறுதித்தன்மை குறைவதுதான் ஆஸ்டியோபொரோசிஸ்.

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பின் உறுதித்தன்மை குறையும். குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் என்ற நோயும், பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியாவும் ஏற்படுகிறது. எலும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் சேமிப்பு குறைவதால் எலும்பின் வளர்ச்சி பாதிக்கப்படும். 

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாட்டால், கூன் விழுதல், கால் எலும்பு வளைதல், எலும்பு தனியாக நீட்டிக்கொண்டு வளருதல் பொன்றவை ஏற்படும். பெரியவர்களுக்கு, எலும்பு மெலியும், தொட்டாலே வலிக்கும், மூட்டு வலி ஏற்படும், தொடர்ந்து அறிகுறிகளைப் புறக்கணித்துவந்தால், ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாத சூழல் ஏற்படும்.

ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம்,  வைட்டமின் டி  குறைபாட்டையும்,  பாஸ்பரஸ் இழப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் பற்றாக்குறையையும் கண்டறியலாம். எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டுள்ளதா எனத் தெரிந்துகொள்ளலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு அல்லது சூரிய ஒளிபடாமையால் ஆஸ்டியோமலேசியா ஏற்பட்டால் வைட்டமின் டி சப்ளிமென்டை வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம்.  கால்சியம் அல்லது பாஸ்பரஸ் தாதுஉப்புக்கள் அளவு குறைவு காரணம் என்றால், இவற்றை உணவு வழியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

வராமல் தடுக்க...


போதுமான அளவு வைட்டமின் டி உள்ள உணவுகள் எடுத்துக்கொள்வது, வைட்டமின் டி சத்து மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆஸ்டியோமலேசியா ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எண்ணெய் சத்து நிறைந்த மீன் வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, பால் உள்ளிட்டவற்றில் வைட்டமின் டி ஓரளவுக்கு உள்ளது. தினமும், 10 முதல் 15 நிமிடங்கள் வெயில் நம்மீது பட்டால் கூட நம்முடைய சருமமே வைட்டமின் டியை உற்பத்தி செய்துவிடும்.

- தொடரும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick