மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கு.கணேசன், பொதுநல மருத்துவர்ஹெல்த்

யிற்றுப் பிரச்னைக்காக அடிக்கடி மருத்துவரிடம் சென்றால், ‘ஸ்கேன்’ செய்து பார்க்க வேண்டும் என்று சொல்வது உண்டு. அந்த ஸ்கேன்களில் முதன்மையானது ‘அல்ட்ரா சோனோகிராபி’ (Ultra sonography) என்று அழைக்கப்படுகிற அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். இதில் எக்ஸ் கதிர் வீச்சு பாதிப்பு இல்லை என்பதால், மருத்துவத்துறையில் பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கிறது.

செயல்படும் விதம்

கேளா ஒலி அலைகளைப் (Ultrasound) பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. பொதுவாக, 1 - 20 MHz ஒலியலை அதிர்வுகளை (Frequencies) உடலுக்குள் செலுத்தினால், அவை எதிரொலித்துத் திரும்பிவரும். அவற்றை பிம்பங்களாக மாற்றினால், உடல் உறுப்புகளின் தன்மை தெரியும். இந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ‘அல்ட்ரா சவுண்ட்’ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எப்படி வௌவால்கள் தங்களிடமிருந்து மிக நுண்ணிய ஒலி அலைகளைக் காற்றில் அனுப்பி, அவை திரும்பிவரும் திசையைக் கண்டறிந்து, தங்கள் இரையைத் தெரிந்துகொள்கிறதோ அல்லது இரவில் தங்கள் பயணப் பாதையை அமைத்துக்கொள்கிறதோ, அதே அறிவியல்தான் இதற்கும் பயன்படுகிறது.

எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

பார்ப்பதற்கு ஒரு கணினிப் பெட்டி மாதிரிதான் இந்த ஸ்கேன் கருவி இருக்கும். அமைப்பிலும் அளவிலும் ஒரு டார்ச் லைட் போல் இருக்கிற ‘புரோப்’ (Probe) எனும் நுண்ணாய்வுக் கருவி இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்பவும் உடலிலிருந்து எதிரொலித்து வரும் அலைகளைத் திரும்பப் பெற்றுக் கணினிக்குள் அனுப்பவும் இதுதான் உதவுகிறது.

பயனாளியை மேஜையில் படுக்கவைத்து பரிசோதிக்க வேண்டிய உடல் பகுதியில் ஒரு பசையைத் தடவுகிறார்கள். இந்தப் பசை, புரோபுக்கும் சருமத்துக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. அப்போதுதான் ஒலி அலைகளைத் துல்லியமாக அனுப்பவும் திரும்பப் பெறவும் முடியும். புரோபைப் பரிசோதிக்க வேண்டிய பகுதிக்குக் கொண்டு செல்லும்போது, கேளா ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. உடனே அந்த உறுப்பிலிருந்து ஒலி அலைகள் எதிரொலித்துத் திரும்பி கணினிக்கு வருகின்றன. ஆனால், திரும்பி வரும் ஒலி அலைகள் அனைத்தும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. திசுவின் தன்மையைப் பொறுத்து அந்த அலைகளின் அதிர்வுகள் வேறுபடும். அவற்றைக் கணினி புரிந்துகொண்டு, மின் சமிக்ஞைகளாக மாற்றி, உடல் உறுப்புகளை வெவ்வேறு வடிவங்களில் படங்களாகத் தயாரித்துக் கணினித் திரையில் காண்பிக்கும். இவற்றை மருத்துவர் ஆராய்ந்து நோய்களைக் கணிப்பார். மேலும், அந்தப் படங்களை ஃபிலிமில் பிரின்ட் செய்து நோயாளியிடம் கொடுத்துவிடுவார்.

எந்த நோய்கள் தெரியும்?

குடல்வால் அழற்சி, குடல் கட்டிகள், குடல் புற்றுநோய், வயிற்றில் தேங்கும் நீர், கல்லீரல் வீக்கம், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் சுருக்கம், மண்ணீரல் வீக்கம் போன்ற பல பாதிப்புகளை இதில் காண முடியும். பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள், பித்தக்குழாய் அடைப்பு ஆகிய நோய்களையும் இதில் தெரிந்துகொள்ள முடியும். கணைய அழற்சி மற்றும் கணையப் புற்றுநோயைக் கண்டறியவும் இது உதவுகிறது.

சிறுநீரக வீக்கம், சிறுநீரக நீர்க்கட்டி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் மற்றும் புற்றுநோயை அறிவதற்கு உதவும் முதல் கட்டப் பரிசோதனை இதுதான். உமிழ்நீர்ச் சுரப்பி, நிணநீர்ச் சுரப்பி, தைராய்டு சுரப்பி மற்றும் பேராதைராய்டு சுரப்பியின் அமைப்பு, வீக்கம், அழற்சி, புற்றுநோய் போன்ற விவரங்களை இதில் அறியலாம். விரைப்பை (Scrotum) மற்றும் விரைகள் (Testes) தொடர்பான எல்லா நோய்களையும் இதில் அறிய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick