32 வயதில் 50 எலும்பு முறிவுகள் - நம்பிக்கை இழக்காத நல்லாசிரியரின் கதை

ஹெல்த்

விழுப்புரம் அருகே காணை என்றொரு கிராமம் இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர் வண்ணத்துப்பூச்சி ஒன்று அங்கே வசித்து வந்தது. மலரிலிருந்து தேனைப் பருகிக்கொண்டு, ஏதோ மலருலகின் மன்னனைப்போல் மகிழ்ச்சியாக அது சுற்றித்திரியும். நீலமும் கறுப்பும் கலந்த அதன் இரு இறக்கைகள், இரு விழிகள்போன்ற உருவத்தைக் கொண்டிருந்தன. அதேபோன்ற விழிகளைக் கொண்ட சிறுவன் ஒருவனும் அவ்வூரில் இருந்தான். பெயர் புஷ்பராஜ். அந்த நீல நிற வண்ணத்துப்பூச்சியின் வசீகரத்தில் மயங்கிய அச்சிறுவன், அதை எப்படியேனும் ஓவியமாக வரைந்திட வேண்டும் என ஆசை கொண்டிருந்தான். தினமும் அதைப் பிடிக்க முயல்வான். ஆனால், வண்ணத்துப் பூச்சியோ உயரப்பறந்து தப்பித்துவிடும். இப்படியாக அதுவும் ஒருநாள் அவன் கைகளில் சிக்கிக்கொண்டது. பிரமித்துப்போய் அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன், கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலும் அதன் கால்கள் உடைந்துவிடுமே எனச் சுதாரித்து உடனே பறக்கவிட்டான். அவன் மனதில் ஓரளவு பதிந்திருந்த அதன் உருவத்தை ஓவியமாக வரைந்தான். வரைந்த ஓவியத்தைத் தனது அம்மாவிடம் காட்ட சிட்டெனப் பறந்தான் புஷ்பராஜ். வேகம் கால்களைத் தடுமாறச் செய்தது. கீழே விழுந்து கால் எலும்பை உடைத்துக்கொண்டான். பதறிப்போன அவன் அம்மா குமாரி, புஷ்பாவைத் தோளில் தூக்கிப்போட்டு மருத்துவரிடம் ஓடினார். கட்டு கட்டிவிட்டு `பயப்பட வேண்டாம். சரியாகிடும்’ என்றார் மருத்துவர். அவன் அம்மாவுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. குலசாமியை நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டார். அந்த வண்ணத்துப்பூச்சியும் அங்குதான் இருந்தது. ஆனால், அழுதுகொண்டிருந்தது. புஷ்பாவின் உடலும் சிறு அழுத்தமான தொடுதலைத் தாங்கும் வலிமையை இழந்துவிட்டதென அதற்குத் தெரிந்திருந்தது. புஷ்பராஜ் அன்றிலிருந்து சிறகொடிந்த வண்ணத்துப் பூச்சியாக மாறினான். காரணம், பாலியோஸ்டேட்டிக் ஃபைப்ரஸ் டிஸ்ப்ளேஸியா ( Polyostatic Fibrous Dysplasia) எனும் அரக்கன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick