கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

எனக்கு வயது 24. பொதுவாகவே நான் அதிக நேரம் தூங்குவேன். அதிலும் குளிர் காலம், மழைக்காலம் என்றால் தூங்கும் நேரம் இன்னும் அதிகமாகிறது. படுக்கையைக் கண்டாலே தூக்கம் வருகிறது. இதற்குக் காரணம் என்ன? இதை எப்படிச் சரிசெய்யலாம்?

அருணா, ஒரத்தநாடு.

சிலருக்கு இயல்பாகவே அதிகம் தூக்கம் வரும்.  குழந்தைப்பருவத்திலிருந்து அந்தப் பழக்கம் உருவாகியிருக்கும். இதை நோயாகக் கருதத் தேவையில்லை. ஆனால், தவிர்க்கவே முடியாத அளவுக்குத் தூக்கம் வந்தால் நிச்சயம் மருத்துவரைப் பார்க்க வேண்டும். தூக்கம் என்பது தனிப்பட்ட நபரின் உடல் மற்றும் மனம் சார்ந்தது. குறிப்பிட்ட சில ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதாலும் அதிகத் தூக்கம் வரும். தைராய்டு பிரச்னைகள் இருக்கவும் வாய்ப்பு உண்டு. அனீமியா பிரச்னை இருந்தாலும் சோர்வின் காரணமாக அதிகத் தூக்கம் ஏற்படலாம். தூக்கத்துக்கும் சீதோஷ்ண நிலைக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதிகக் குளிர் மற்றும் அதிக வெயில் காலங்களில் தூக்கம் வராது. இதமான குளிர் மற்றும் மழைக்காலங்களில் தூக்கம் அதிகமாக வரும். இது அனைவருக்கும் ஏற்படும் இயல்பான விஷயம். 

உடலும் மனதும் நன்றாக இருக்கும் பட்சத்தில் இதனைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கனவு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் காரணமாக இரவில் ஆழமான தூக்கம் இல்லாமல் போனால் பகலில் தூக்கம் வர வாய்ப்புள்ளது.  இள வயதினருக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் தூக்கமின்மைக்குப் பதிலாக அதிகத் தூக்கத்திற்கு வழி வகுக்கும். மனரீதியான பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரையும் தைராய்டு மற்றும் அனீமியா போன்ற பிரச்னைகளுக்குப் பொது மருத்துவரையும் அணுகலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick