உன் உடல் உன் உரிமை

ஹெல்த்

உங்கள் குழந்தைகளுக்கு அவசியமாக மட்டுமின்றி அவசரமாகவும் கற்றுத்தர வேண்டிய பாடங்கள் இவை...

* குழந்தைகளுக்கு உடல் பாகங்களின் உண்மையான பெயர்களைச் சொல்லிக் கொடுங்கள். ‘பம் பம்’, ‘ஷேம் ஷேம்’ போன்ற பெயர்களில் உடல் பாகங்களை அழைக்கும் பழக்கம் வேண்டாம்.

* ‘பிரைவேட் பாடி பார்ட்ஸ்’ என்றால் என்ன என்பது குறித்து அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். ‘நீச்சல் உடை அணிந்தால் நம் உடலின் எந்த பாகமெல்லாம் மறையுமோ, அவையெல்லாம் நம்முடைய பிரைவேட் பாடி பார்ட்ஸ். கூடவே, அவற்றில் நம் வாயும் அடக்கம்’ என்று கற்றுக்கொடுங்கள்.

* ‘உன் பிரைவேட் பாடி பார்ட்ஸை வேறு யாரும் தொட அனுமதிக்கக்கூடாது. உன் உடல் உன்னுடைய உரிமை’ என்று குழந்தைகளிடம் தொடர்ந்து வலியுறுத்துங்கள்.

* ‘வயதில் பெரிய குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ தங்களின் பிரைவேட் பாடி பார்ட்ஸைத் தொடுமாறு உன்னிடம் சொன்னால் நீ செய்யக்கூடாது, அப்படிச் சொல்பவர்கள் ஆபத்தானவர்கள்’ என்று சொல்லிக்கொடுக்க மறக்காதீர்கள்.

* ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்கிற உணர்வை முன்கூட்டியே நமது உடலில் உண்டாகும் சில அறிகுறிகள் உணர்த்திவிடும். உதாரணத்துக்கு, உள்ளங்கை வியர்ப்பது, இதயத்துடிப்பு அதிகமாவது, வயிற்றைப் பிசைவது போன்றவற்றைச் சொல்லலாம். இந்த அறிகுறிகளை ஆங்கிலத்தில் ‘Early Warning Signs’ என்று சொல்வார்கள். ஒரு நபரைச் சந்திக்கும்போது மேற்சொன்ன அறிகுறிகள் குழந்தைக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதைக் குழந்தையோடு கலந்துரையாடுங்கள்.

* குழந்தைகளின் பிரைவேட் பாடி பார்ட்ஸில் அல்லது அவர்கள் விரும்பத்தகாத வகையில் அவர்களை யாரேனும் தொட்டால், உடனே, ‘வேண்டாம், நிறுத்து’ என்று சத்தமாகக் கத்தச் சொல்லுங்கள். அதிலிருந்து தப்பிக்க அப்போதுதான் மற்றவர்களிடமிருந்து உதவி கிடைக்கும் என்பதைப் புரியவையுங்கள்.

* ஒருவேளை யாராவது குழந்தையின் பிரைவேட் பாடி பார்ட்ஸைத் தொட்டிருந்தாலோ, அல்லது குழந்தை விரும்பத்தகாத வண்ணம் நடந்திருந்தாலோ, அல்லது ஒரு நபரிடம் பேசும்போது ‘Early Warning Signs’ ஏற்பட்டிருந்தாலோ அவை குறித்து உடனே நம்பிக்கையான பெரியவர்களிடம் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

* ‘விளையாட்டுத்தனமாகச் சொல்கிறது’ என்று சில நேரங்களில் பெரியவர்கள் குழந்தைகளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தக்கூடும். எனவே, பெரியவர்கள் நம்பும்வரை குழந்தை தனது பிரச்னை குறித்துத் தொடர்ந்து அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

* ‘எந்தெந்த விஷயங்கள் எல்லாம் மனதை அசௌகரியப்பட வைக்கின்றனவோ, கஷ்டப்படுத்துகின்றனவோ, பயம்கொள்ளச் செய்கின்றனவோ அவற்றையெல்லாம் உடனே பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டும்’ என்று குழந்தைகளுக்குக் குறிப்புகள் கொடுத்து வைத்திருங்கள்.

* மிகமிக முக்கியமான விஷயம்... குழந்தைகள் வலிமையுடனும் தைரியமாகவும் இருக்கப் பழக்குங்கள். குறிப்பாக, எது குறித்தும் அவர்கள் வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு அவர்களையும், வீட்டின் சூழலையும் தயார் செய்யுங்கள்.

- சு.கவிதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick