நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

ர் உணவில் அடர்நிறம் இருக்குமானால் அதன் சுவையும் அடர்த்தியாக இருக்கும். சுவை அடர்த்தியாகக் காணப்பட்டால் அதில்  நுண்சத்துகள் நிறைந்திருக்கும். இத்தகைய நுண்சத்துகள் நிறைந்த இயற்கையான விளைபொருள்களான காபி, கோகோ போன்ற கொட்டை வகைகளில் இருந்தும் பழவகைகளில் இருந்தும் மனிதர்களின் சுவை ஈர்ப்பை அடையாளம் கண்டுகொண்டனர் செயற்கை உணவுத் தயாரிப்பாளர்கள்.

இயற்கை விளைபொருள்கள் ஆண்டுக்கு ஓரிரு பருவங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்கள் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உண்டு வந்தனர். அவற்றை ஆண்டு முழுவதும் உண்ணவேண்டும் என்ற பேராசையும் கனவும் அவர்களுக்குத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. தற்கால நுகர்வு வேட்கைதான் ஒரு பொருள் விளையாத காலத்திலும் அவற்றை உண்ண வேண்டும் என்ற விருப்பத்தை அவனுள் ஆழமாக ஊன்றியிருக்கிறது. முதலில் உணவுப்பண்டத்தை அது கிடைக்கும் காலத்தில் சேமித்துப் பதப்படுத்தி வைக்கத் தொடங்கினர். ஆனால், இயற்கையான முறையில் பதப்படுத்த அதற்குரிய காலமும் மனித உழைப்பும் செலவாகும். எனவே சந்தைப் போட்டியில் நிலைத்து நிற்க முடியாது என்பதை உணர்ந்து விரைவாகவும் பெரிய அளவிலும் பதப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். அதற்காக ரசாயனத்தின் உதவியை நாடினர். பின்னர் அதனுடன் கவர்ச்சிக்காகக் கொஞ்சம் நிறமியையும் செயற்கைச் சுவையூட்டியையும் சேர்த்தனர். அப்படிச் சேர்க்கப்படும் மிகக்குறைந்த அளவிலான ரசாயனத்தை எளிதாக வெளியேற்றிவிடும் தகவமைப்பை உடல் இயல்பாகவே பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!