டாக்டர் நியூஸ்!

தகவல்

ள்ளி செல்லும் குழந்தை, ‘முதுகுவலி’ என்று என்றைக்காவது சொன்னால் போதும், உடனே அந்த வீட்டிலிருக்கும் ‘ஸ்கூல்பேக்’ தாக்குதலுக்குள்ளாகும். ‘தினமும் இப்படிக் கிலோகணக்குல புத்தகங்களை முதுகுல தூக்கிட்டுப்போனா முதுகு என்னத்துக்கு ஆகும்? அதனாலதான் சின்னப்பிள்ளைக்கு முதுகுவலி வருது!’ என்பார்கள் பெற்றோர்.

‘அப்படி அவசரப்பட்டு ஸ்கூல்பேகைக் குற்றம் சொல்லாதீர்கள்’ என்கிறார்கள் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். குழந்தைகளுக்கு ஸ்கூல்பேக் ஆபத்தானது என்று பரவலாக நம்பப்பட்டாலும், இதுவரை அதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை!

இதுபற்றி இதற்குமுன் நிகழ்த்தப்பட்டுள்ள 69 ஆராய்ச்சிகளை இந்த நிபுணர்கள் தொகுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில், குழந்தைகளுடைய முதுகுவலி, பிற பிரச்னைகளுக்கு முதுகுப்பையைக் காரணமாகச் சொல்ல இயலாது என்கிறார்கள். சொல்லப்போனால், உடற்பயிற்சி வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் கொஞ்சம் எடையைச் சுமந்துகொண்டு நடப்பது முதுகெலும்புக்கு நல்லதுதானாம்; குழந்தைகள் அப்படி எடையைத் தூக்கிப் பழகுவது அவர்களை ஆரோக்கியமாக வைக்குமாம்.

இந்த விஷயத்தில் யார் சொல்வது சரி என்று நிச்சயமாகத் தெரியவேண்டுமானால், ஒரே வழிதான் இருக்கிறது... வெவ்வேறு எடையுள்ள புத்தகப்பைகளைத் தினமும் தூக்கிச்செல்லும் குழந்தைகளைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கவனிக்கவேண்டும்; அவர்களுக்கு முதுகுவலியோ மற்ற பிரச்னைகளோ வருகின்றனவா என்று சான்றுகளுடன் நிரூபிக்கவேண்டும்; அப்படியோர் ஆய்வு நிகழாதவரை, ஸ்கூல்பேக் நிரபராதிதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick