கருணையே வேண்டாம் உரிமைகள் போதும்! - துப்பாக்கி தூக்கும் எழிலரசி

தன்னம்பிக்கை

‘‘ஊனமுற்றோர் என்ற வார்த்தை, ‘மாற்றுத்திறனாளிகள்’னு மாறியிருக்கு. பேரை மட்டும் மாத்திவெச்சிட்டு, மாற்றுத்திறனாளிகளைப் பத்தின கண்ணோட்டத்தை மாத்திக்காத பலரையும் நாங்க தினமும் பாக்கறோம். துபாய் போயிருந்தப்போ ‘Parking for People with determination’னு ஒரு சைன் போர்டுல பாத்தேன்.  பாத்ததும் அவ்வளவு பரவசம். உண்மைதானே அது... உங்களைவிடவும் நாங்க  இருமடங்கு பலம் வாய்ந்தவங்க” - தமிழகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் பிரிவில், ஏர் பிஸ்டல் வகைத் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றிருக்கும் எழிலரசியின் வார்த்தைகள் இவை.

கடந்த நவம்பர் மாதம், டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடுதல் டோர்னமென்ட்டில் தமிழகத்துக்குத் தங்கத்தைத் தட்டிவந்தவர் எழிலரசி. அதற்கு முன் நடந்த ஸ்டேட் லெவல், தென்மண்டல அளவுப் போட்டிகளிலும் தங்கம் வென்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை உதவிப் பேராசிரியரான இவரின் மேசையை மெடல்களும் சான்றிதழ்களும் அலங்கரிக்கின்றன. அவரே தயாரித்துக் கொண்டுவந்த அதிமதுரத் தேநீரைக் கொடுத்துவிட்டுப் பேசத்தொடங்கினார்.

“காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிக்குப்பம்தான் எனக்குச் சொந்த ஊர். என் வீட்டுல எல்லாரும் நல்லா படிச்சவங்க. அப்பா பொதுப்பணித்துறைல வேலை பார்த்து ரிடையர் ஆகிட்டாங்க. அம்மா வீட்டைப் பாத்துக்கறாங்க. எட்டு மாசத்துலயே எழுந்து நடந்த குழந்தை நான். இரண்டரை வயசுல, திடீர்னு ஒருநாள் காய்ச்சல் வந்து நான் நடக்கவேயில்லையாம். நிக்க வெச்சாலும், கால்கள் ரெண்டும் தளர்ந்து கீழே விழுந்துருக்கு. போலியோ பாதிப்புதான் இதுக்குக் காரணம்னு, பல மருத்துவர்களும் சொல்லியிருக்காங்க. இத்தனைக்கும் எல்லாத் தடுப்பூசிகளும் எனக்கும் போடப்பட்டிருக்கு. எனக்கு மட்டும் இப்படி நடக்கல. இது நடந்த அதே சமயத்துல, தெருவுல இருந்த வேற மூணு குழந்தைகளுக்கும்கூட, இதே மாதிரி காய்ச்சல் வந்து கால்கள்ல குறைபாடு ஏற்பட்டிருக்கு. 7-வது படிக்கிற வரைக்கும் அப்பாதான் ஸ்கூலுக்கு தூக்கிட்டுப் போய் விடுவாங்க. அதுக்கப்புறம் நான் கேலிப்பெர் பயன்படுத்தத் தொடங்கிட்டேன்” - புன்னகையே சுபாவமாக இருக்கிறது அவருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick