தைராய்டு - ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

ஹெல்த் ஜனவரி - தைராய்டு விழிப்புஉணர்வு மாதம்

 

ணவு உட்கொள்வதால், பாத்திரம் கழுவுவதால், வேலைக்குச் செல்வதால், எக்ஸ்-ரே எடுத்துக்கொள்வதால் உங்கள் சந்ததியின் கவனிக்கும்திறன் அல்லது பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? `சீனாவின் மலர்வனத்தில் சிறகசைக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் அசைவு, மேற்கிந்தியத் தீவுகளில் ஏற்படும் சூறாவளிக் காற்றுக்குக் காரணமாகிறது. ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்...’ என்று மேற்கத்திய விஞ்ஞானியான எட்வர்டு லோரென்ஸின் `கேயாஸ் தியரி’ (Chaos Theory) கோட்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதை நினைவுகூர்ந்தபடி தைராய்டு, அதன் செயல்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

கிரேக்க மொழியில், `Thyreos’ என்றால் `கேடயம்’ எனப் பொருள்படும். இந்தத் தைராய்டு சுரப்பி, தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயலாலும் மனித உடலுக்குக் கேடயமாக விளங்குகிறது. தைராய்டு சுரப்பிக்குள் உள்ள `தைரோகுளோபுலின்’ (Thyroglobulin) என்ற புரதத்தில், T4 என்ற `தைராக்ஸின்’ (Thyroxine), T3 என்ற `ட்ரை அயோடோ தைரோனின்’ (Tri Iodo Thyronine), மற்றும் `கால்சிடோனின்’ (Calcitonin) போன்ற முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றில் `T3’, ‘T4’ போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு, நமது உடலின் உள்ளேயே சுரக்கும் `டைரோசின்’ (Tyrosine) என்ற அமினோ அமிலமும், நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அயோடின் உப்பும் இன்றியமையாதவை.

`பேஸல் மெட்டபாலிக் ரேட்’ (Basal Metabolic Rate - BMR) என்ற உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் இந்த தைராய்டு ஹார்மோன்கள், கரு உருவான 11-வது வாரத்திலேயே, சுரக்கத் தொடங்கிவிடுகின்றன. கருவிலேயே குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன; கரு வளர்ந்ததும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன; இதயம் மற்றும் நுரையீரல் இயக்கம், சிறுநீரகம் மற்றும் குடலியக்கம், எலும்பு மற்றும் தசைகளின் உறுதி, திசுக்களின் வளர்ச்சி மற்றும் சீரமைப்புக்கு உதவுகின்றன; பெண்கள் பருவமடைதல், கருத்தரித்தல் மற்றும் கருவளர்ச்சிக்கும் உதவுகின்றன.

உணவிலுள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றப் பணிகளை ஊக்கப்படுத்துவதுடன் அவற்றிலிருந்து பெறப்படும் `ஏடிபி’ என்ற ஆற்றலை கட்டுப்படுத்துவதால், இந்த தைராய்டு ஹார்மோன், வாழ்க்கைப் பயணம் தடையின்றி சீராக ஓடச் செய்யும் இன்ஜின் என்றே கருதப்படுகிறது. `இன்ஜின்’ என்றால் அதற்கு இக்னிஷன் சாவி என்ற ஒன்று இருக்க வேண்டும். அந்தச் சாவி, மூளையிலுள்ள ஹைப்போதாலமஸிலும் பிட்யூட்டரியிலும் அமைந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் தைராய்டு ஊக்கி ஹார்மோன்களான  `TRH, TSH’ இரண்டும், தைராய்டு என்ற இன்ஜினை, அதிலுள்ள `T3, T4’ ஹார்மோன்கள் ஆன், ஆஃப் செய்யும் சாவிகளாகத் திகழ்கின்றன. எப்போதெல்லாம் அந்த இன்ஜின் அல்லது சாவி செயல்படுவதில் தடை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உடலின் பயணம் தடைப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick