நமக்குள்ளே!
மூழ்கிய வீடுகள், இடம்பெயர்ந்த மக்கள், சாலைகளில் படகுப் போக்குவரத்து, ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் என கடந்த இருவாரங்களில் தமிழகத்தில், குறிப்பாக வடதமிழகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி, பலருடைய இதயங்களில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்திவிட்டது மழை!
மழையால் பொங்கி வந்த வெள்ளம், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை புரட்டியெடுத்த அதேவேளையில், ஆங்காங்கே இந்த மழை பாதிப்புகளினூடே பொங்கிய மனிதாபிமான காட்சிகள், நெஞ்சத்தை நிறைக்கவே செய்கின்றன. இதையெல்லாம் எங்கள் நிருபர்களில் சிலர் நேரடி அனுபவமாக பகிர்ந்தது... நெகிழ்ச்சியாக இருந்தது.

என்னதான் அடுக்குமாடிக் குடியிருப்பு என்றாலும்... எதிரெதிர் வீட்டில் இருப்பவர்களே பேசிக்கொள்வது அரிது என்பதுதான் சென்னையின் சாபம். எதிர் வீடே இப்படியென்றால், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்திலிருப்பவர்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. ஆனால், இந்த திடீர் மழையில் கீழ்தளங்கள் முழுமையாக மூழ்கிப் போக... பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வாஞ்சையோடு தங்குவதற்கு இடம் தந்து, உணவு கொடுத்து உபசரித்த மேல்தள வாசிகளின் அன்புப் பரிமாற்றம்... அடடா!
கிண்டி அருகே ஸ்கூட்டரில் குழந்தையையும் பெண்மணியையும் உட்கார வைத்து, முழங்கால் அளவு தண்ணீரில் தள்ளிக்கொண்டே ஒரு சில கிலோமீட்டர் தூரம் வரை நடந்தார் ஒருவர். குறிப்பிட்ட பகுதி வந்ததும், அந்த நபருக்கு நன்றி சொல்லி, அருகிலிருந்த தன் வீட்டுக்குள் ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்றார் அந்தப் பெண்மணி!
அதுவரை கூடவே நடந்த நம் நிருபரின் ஆச்சர்யப் பார்வைக்கு, `ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிட்டதால, அந்த இருட்டு நேரத்துல மழையில நனைஞ்சபடி நடுங்கிட்டே நின்னுட்டிருந்தாங்க. அதான், உட்கார வெச்சு தள்ளிட்டு வந்தேன். இது நான் போற வழிதான். இதோ அவங்க வீடு வந்துடுச்சு’ என்று சிலிர்க்க வைக்கும் பதில் தந்தார் ஸ்கூட்டரை தள்ளிவந்த நபர்.
அடைமழை ஒருபக்கம் சென்னையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அதேநேரத்தில்... `இதோ நாங்கள் இருக்கிறோம்...’ என்றபடி அரங்கேற்றப்பட்ட இத்தகைய மனிதாபிமானமிக்க காட்சிகள்... நம்பிக்கை ஊற்றெடுப்பதற்கான சாட்சியே!
`மழை’ என்று ஓடி ஒதுங்கிக்கொள்ளாமல் களத்தில் இறங்கிய அத்தனை பேரும், நம் ஒவ்வொருவரின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவர்கள்தானே தோழிகளே!
உரிமையுடன்,

ஆசிரியர்