அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

``கடந்த இதழில் வெளியான `நமக்குள்ளே', எனக்குள்ளே ஒரு நெகிழ்ச்சியை உண்டு பண்ண, இந்த வருட பொங்கலுக்கு, திருநெல்வேலி பக்கமிருக்கும் கிராமத்துக்கு, திடீர் பயணமாகக் குடும்பத்தோடு சென்றோம். சொந்தங்களைக் காணும் ஆவலில், தட்கல் மூலம் டிக்கெட், சொந்தங்கள் எல்லோருக்கும் துணிமணி, குழந்தைகளுக்கு பொம்மைகள் என்று பெரும்செலவில்தான் போய் இறங்கினோம்.

நமக்குள்ளே!

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பொங்கல் நேரத்தில் ஊருக்குச் செல்வதற்கு என்னிடமும் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று... எப்போதாவது நல்லது, கெட்டதுகளில் மட்டுமே பார்க்கிற உறவுகளை மொத்தமாக இணைத்துப் பார்த்து, சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது; இன்னொன்று... மைத்துனர், நாத்தனார் இடையே நீடிக்கும் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பது.

பழைய கிராமத்தை மனதில் சுமந்தபடி போய் நின்றால், அங்கே எல்லாமே தலைகீழ்! ஆலமரத்தின் விழுதுகளை சேர்த்துக்கட்டி ஊஞ்சல் ஆடிய இடத்தில் மளிகைக் கடை முளைத்திருந்தது. ஓடியாடி விளையாடிய ஆற்றங்கரை, ஆக்கிரமிப்புத் தோட்டமாக சிறைப்பட்டிருந்தது. இடைவெளிவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழகாக இருந்த வீடுகள், நகர்ப்புறம் போல நெருக்கமாக இருந்தன.

சமீபத்தில் பெய்த பெருமழையின் புண்ணியத்தால் ஆற்றில் கொஞ்சமாய் நீர் ஓடிவர... எங்கள் குழந்தைகள் இருவரும் அதில் மீன் பிடித்து, நீச்சலடித்து, ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, கோழி என்று துரத்திப் பிடித்து கிராம ஆசையை தீர்த்துக்கொண்டார்கள். பெருநகரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இப்போதிருக்கும் கிராமமே பெருவியப்பு! ஆனால், வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு விசாரிக்கும் பெரியத்தா இல்லாமல், எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் என விற்கும் செம்மாயி அக்காவை காணாமல், எனக்கு அத்தனை வெறுமை!

வராமல் வந்தவர்களிடம் வாய்விட்டு, மனம் விட்டுக்கூட பேச இயலாமல் சொந்தங்கள் எல்லாம் நகர்ப்புற மனிதர்கள் போலவே, தத்தமது வேலைகளில் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்க... புகைப்பட ஆசை, சொத்துப் பிரச்னைக்கு தீர்வு என்பதெல்லாம் என் மனதிலிருந்தே விலகி ஓடிவிட்டன.

ஆனால், என் இரு குழந்தைகளும் அத்தனை ஈடுபாட்டோடு கிராமத்தை ரசித்து, ஊர் திரும்பும் நேரத்தில் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தது... `மனிதர்கள் மட்டுமே கிராமம் இல்லை' என்பதை என் தலையில் ஓங்கிக் குட்டி சொல்வது போலிருந்தது!''

- வாசகியின் இந்த ஓர் அனுபவம்... ஊருக்கெல்லாம் பாடம்தானே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்