
மெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்!

அவள் விகடன் 18-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘18 பவுன் தங்கம்... மெகா பரிசுப் போட்டி’யில், இதுவரை அறிவிக்கப்பட்ட 15 வெற்றியாளர்களைத் தொடர்ந்து, ‘படம் பார்த்து கதை எழுதுங்கள்' (போட்டி எண் 17) மற்றும் ‘வெட்டுங்க ஒட்டுங்க' (போட்டி எண் 18) ஆகியவற்றின் வெற்றியாளர்கள் இங்கே!
போட்டி எண்: 17
படம் பார்த்து கதை எழுதுங்கள்
வெற்றியாளர்: சியாமளா ராஜசேகர், சென்னை
நடுவர்: பட்டுக்கோட்டை பிரபாகர்


ஏன் தேர்வு செய்தேன்: பல வாசகிகள் கதை அனுப்பி இருந்தனர். அவற்றில் சில, நாவலுக்கான கதைத்தளம் அளவுக்கு அசத்தலாக இருந்தன. ஆனால், வாசகி சியாமளாவின் கதை, ஒரு பக்கக் கதைக்கான அம்சங்கள் மற்றும் மனிதாபிமானத்தை முன்னிறுத்தியிருந்தது. படிக்கும்போது கதாபாத்திரங்களின் மனதை நாமும் உணரும்படி இருந்தது. சியாமளாவுக்கு பாராட்டுகள்!’’
போட்டி எண்: 18
வெட்டுங்க... ஒட்டுங்க...

இந்தப் போட்டியில் புகைப்படக் கலைஞர் நா.வசந்தகுமாரின் புகைப்படத்தை பல துண்டு களாகப் பிரித்துக்கொடுத்திருந்தோம். அவற்றை சரியாக ஒட்டி, அதற்குப் பொருத்தமாக இரண்டு வரிகள் எழுத வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை.

வெற்றியாளர்: எம்.ஆயிஷா பர்வீன், சென்னை
நடுவர்: எம்.பாலசுப்ரமணியெம், ஒளிப்பதிவாளர், சென்னை

ஏன் தேர்வு செய்தேன்: ஆயிஷா எழுதியிருந்த வாசகம், ‘வாழ்க்கை அது வசதியில் இல்லை, இயற்கையோடு வாழ்ந்தால் ஈடு இணையில்லை!’ கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கை முறையை இரண்டே வரிகளில் கடத்தியிருக்கிறார். வாழ்த்துகள்!
படங்கள்: ப.சரவணகுமார், ஆ.முத்துக்குமார்

‘படம் பார்த்து கதை எழுதுங்கள்' போட்டியில் (போட்டி எண்-17) வெற்றிபெற்ற சியாமளா ராஜசேகர் எழுதிய கதை இங்கே...
நீலவானில் சித்திரை நிலவு சிரித்துக் கொண்டிருந்தது. வெண்ணிலவொளியில், பாதையோரம் அமர்ந்திருந்த மாயம்மாவைப் பார்த்துவிட்டாள் வர்ஷா. வறுமையின் ரேகைகள் முகமெங்கும் பரவியிருந்ததைக் கண்டாள். ஒரு கணம் அவள் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.
ஜீன்ஸ் பேன்ட், ஷர்ட், கூலர்ஸ் சகிதம் டூ வீலரில் சென்றுகொண்டிருந்தாள் வர்ஷா. மொபைல் ஒலித்தது. மறுமுனையில் அமுதன்!
‘‘வர்ஷா, ஈவினிங் உன் தம்பியோடு `காபி டே'க்கு வா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” - சொல்லிவிட்டு கட் செய்துவிட்டான்.
ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், லெகிங்ஸ் அணிந்து தம்பி நரேஷுடன் கிளம்பினாள் வர்ஷா. காபி குடித்தபடியே அமுதன் ஆரம்பித்தான்...
‘‘வர்ஷா! நம்ம லவ் பத்தி அம்மாகிட்ட சொன்னேன். அம்மாவுக்கு `ஓ.கே'. உன் போட்டோ கேட்டாங்க. எங்கம்மா கிராமத்து மனுஷி. பழைமையில் ஊறினவங்க. கலாசாரத்துல ஒன்றிப்போனவங்க. அழகா புடவை கட்டி அவங்களுக்குப் பிடிக்கிறாப்பல ஒரு போட்டோ எடுத்துக்கொடு!”
வீட்டுக்கு வந்தவள் ‘உம்’ என்று இருப்பதைப் பார்த்து வேலைக்காரி மாயம்மா, ‘ஏம்மா டல்லா இருக்க?’ என்று கேட்க, விஷயத்தைச் சொன்னாள்.
‘‘இதுக்காம்மா கவலைப்படறே? நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுந்திரு. நான் உனக்கு சேலை கட்டிவிடறேன். நாளைக்கு மார்கழி பொறக்குதுல்ல..? வாசல்ல பெருசா கோலம்போட்டு காவி பார்டர் கட்டுறேன். நீ கோலம் போடறா மாதிரி போஸ் கொடுத்து படம் புடிச்சுக்கோம்மா!”
கீழ்வானில் செங்கதிரோன் தலைகாட்டும் வேளை வாசலில் மாயம்மா கோலம்போட்டு முடித்துவிட்டாள். வர்ஷாவுக்கு அழகாக புடவை கட்டிவிட, கோலம்போடுவதுபோல் வர்ஷா போஸ் கொடுக்க, அதை அவள் தம்பி மொபைலில் படம் பிடித்தான். அமுதனுக்கு ஆச்சர்யம்... இப்படி ஒரு ஹோம்லி தேவதை படத்தைப் பார்த்து. அவன் அம்மாவுக்கும் வர்ஷாவை மிகவும் பிடித்துவிட்டது. தை பிறந்ததும் பேசி திருமணம் முடிந்தது. அழகான, ஆனந்த வாழ்வில் பூரித்துவிட்டாள் வர்ஷா.
ஏழு வருடங்கள் உருண்டோடிய நிலையில்தான், இன்று பாதையோரம் மாயம்மாவைக் கண்டாள் வர்ஷா. அதிர்ச்சியடைந்தவள், வேகமாகப்போய் ஹோட்டலில் உணவு வாங்கிவந்து கொடுத்தாள். பார்வை மங்கிய மாயம்மாவுக்கு வர்ஷாவைத் தெரியவில்லை. மனம் பேதலித்ததுபோல் இருந்தாள். மாயம்மாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு, மனம் பாரமாக இருந்தது.
தாயில்லாமல் வளர்ந்த வர்ஷாவுக்கும், நரேஷுக்கும் நல்ல தாதியாய் இருந்தவள்... இன்று தெருவில். ‘முதல் வேலையா மாயம்மாவை நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட்கொடுத்து நம்ம கூடவே வெச்சுக்கணும். இதுதான் நான் செலுத்துற நன்றிக்கடன்!’
- தனக்குள் எண்ணியவள் நிம் மதியாய் உறங்கினாள்.
ஓர் அறிவிப்பு!
1.12.15 தேதியிட்ட அவள் விகடன் இதழில், ‘வீடியோ எடுங்க... பரிசை வெல்லுங்க’ குறும்படப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம் (போட்டி எண் 8). வந்து சேர்ந்த படைப்புகள், இன்னும் சிறப்பானதாக இருக்கலாம் என ஆசிரியர் குழு கருதியதால், அந்தப் போட்டிக்கான வாய்ப்பு மீண்டும் உங்களைத் தேடி வருகிறது.
தண்ணீர், மின்சாரம், சாப்பாடு... இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, இவற்றை வீணாக்கக் கூடாது எனும் கருத்தை உணர்த்தும் வகையில் மூன்று நிமிடத்துக்குள்ளான குறும்படம் எடுத்து அனுப்புமாறு வாசகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வீடியோ கேமரா அல்லது மொபைலில் இருக்கும் வீடியோ கேமராவைப் பயன்படுத்தி எடுக்கலாம். இல்லத்தரசிகளுடன், கல்லூரிப் பெண்களின் படைப்பாற்றலுக்கும் தீனியாக இருக்கும் இந்தப் போட்டி. கமான் கேர்ள்ஸ் கலக்குங்க!
குறிப்பு: இந்த வீடியோக்களை வி.சி.டி அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பவேண்டும் என்பது முக்கியம்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 18.4.16
உங்கள் படைப்புகளை, போட்டியின் தலைப்பைக் குறிப்பிட்டு, `அவள் விகடன்', 757 அண்ணா சாலை, சென்னை-2 `என்கிற முகவரிக்கு அனுப்பவும். அதாவது, முகவரியில் முதல் வரியாக போட்டியின் தலைப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். மின்னஞ்சல் முகவரி: aval@vikatan.com