நடப்பு
Published:Updated:

தேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை!

தேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
தேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை!

ஹலோ வாசகர்களே..!

டந்த ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த நான்காம் காலாண்டில், நமது ஜி.டி.பி வளர்ச்சி 6.1 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், நம் ஜி.டி.பி 9 சதவிகிதமாக இருந்தது. இதன் மூலம் சீனாவைவிட அதிவேகமாக வளரும் பொருளாதாரம் நம்முடையது என்கிற பெருமையை நாம் இழந்திருக்கிறோம்.

தேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை!நம் ஜி.டி.பி வளர்ச்சி குறையக் காரணம், பண மதிப்பு நீக்கம்தான் என்கிறார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் பணப் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. இதனால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் கடுமையாகப் பாதிப்படைந்தன.

பண மதிப்பு நீக்கத்தினால் பொருளாதார வளர்ச்சிக் குறையும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் கடந்த ஏப்ரலில் இருந்தே மக்களிடம் பணப்புழக்கம் ஓரளவுக்கு அதிகரித்து,  பொருள்களின் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நமது ஜி.டி.பி வளர்ச்சி 6.1 சதவிகிதத்தை விடக் குறையாது என நம்பலாம். எனினும், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதால், இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி மீண்டும் குறையலாம். 

இந்த நிலையில், நமது பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் திட்டமிட்டு, துரிதமாக எடுக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற அதே நேரத்தில், உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் நடவடிக்கைகளை வேகமாக எடுக்க வேண்டும். தொழில் துறை வளர்ச்சியைப் பெருக்கும் அதே வேளையில், விவசாயம் மற்றும் சேவைத் துறை வளர்ச்சியை மத்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமாக, கடன்களுக்கான வட்டி விகிதத்தை வரும் 6, 7 தேதிகளில் நடக்கும் கூட்டத்தில் ஆர்.பி.ஐ கட்டாயமாகக் குறைக்க வேண்டும். கடன் களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, தொழில் நிறுவனங்கள் புதிதாகக் கடன் வாங்கித் தொழிலை விரிவாக்கம் செய்யும். தற்போது கடன் வளர்ச்சி மிகக் குறைந்த நிலையில் இருக்கக் காரணம், கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதே. தவிர, கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்தால், மக்களும் கடன் வாங்கிப் பல்வேறு பொருள்களை வாங்குவார்கள். அதனால் விற்பனை அதிகரித்து, உற்பத்தி பெருகும்.

ஆக, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. என மேக்ரோ பொருளாதார நடவடிக்கைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தாமல், பொருளாதாரத்தின் மைக்ரோ விஷயங்களிலும் கவனம் செலுத்தினால்தான் மக்கள் திருப்தி அடைவார்கள். இதை இந்த அரசாங்கம் உடனே உணர்வது அவசியம்!  

- ஆசிரியர்