நடப்பு
தொடர்கள்
Published:Updated:

யாருக்கும் பயன்படாத தமிழக அரசின் நடவடிக்கை!

யாருக்கும் பயன்படாத தமிழக அரசின் நடவடிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
யாருக்கும் பயன்படாத தமிழக அரசின் நடவடிக்கை!

ஹலோ வாசகர்களே..!

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33% குறைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ரியல் எஸ்ட்டேட் துறை முடங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில், அரசு எடுத்திருக்கும் இந்த முடிவினைக் கண்டு பலரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அரசின் இந்த அறிவிப்பினால் மனைகளின் விலை குறையும். இதனால், இனியாவது சொந்தமாக ஒரு மனையை வாங்க முடியும் என்கிற நம்பிக்கை நடுத்தர வர்க்கத்து மனிதர்களிடம் பிறந்திருக்கிறது.

யாருக்கும் பயன்படாத தமிழக அரசின் நடவடிக்கை!


ஆனால், அரசின் இந்த அறிவிப்பினைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தாலே போதும், யாருக்கும் பயன்படாத அறிவிப்பு இது என்பது புரியும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, பல இடங்களில் சந்தை மதிப்பினைப் பிரதிபலிக்கவில்லை. இதனைச் சரிசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்தக் குறையைச் சரிசெய்யாமல், நிலத்தின் மதிப்பைத் தற்போதுள்ள மதிப்பிலிருந்து 33% குறைத்துள்ளது. இதனால் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஓர் இடத்துக்கான பத்திரப்பதிவுச் செலவு மொத்தத்தில் சுமார் ரூ.20,000 மட்டுமே குறையும் என்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்?

அது மட்டுமல்ல, முத்திரைத்தாள் கட்டணத்தைக் (7%) குறைக்காமல், பதிவுக் கட்டணத்தைத் தற்போதிலுள்ள 1 சதவிகித்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசாங்கம். இது ஏற்கெனவே இருந்ததைவிட அதிகம். அதாவது, மொத்தப் பத்திரப் பதிவு செலவு 11 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. இது, பிற மாநிலங்களில் உள்ளதைவிட மிக மிக அதிகம். உதாரணமாக, தெலங்கானாவில் 4.5%, மத்தியப்பிரதேசத்தில் 5.8%, குஜராத்தில் 5.9% என்கிற அளவில்தான் கட்டணங்கள் உள்ளன.  தமிழக அரசாங்கம் இந்த அளவுக்குக் குறைக்கவில்லை என்றாலும், இதற்குப் பக்கத்தில் இருக்கிற மாதிரியாவது செய்திருக்கலாம். ஆனால், குறைப்பது போன்று குறைத்து, தனது வருமானம் எந்த வகையிலும் குறையாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசாங்கம்.

தமிழக மக்கள் எதிர்பார்த்தது இப்படிப்பட்ட ஓர் அறிவிப்பினையல்ல. தமிழகம் முழுக்க, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பதிவு செய்ய முடியாத நிலையே கடந்த பத்து மாதங்களாக இருக்கிறது. இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுத்து, அதனை நீதிமன்றத்திடம் எடுத்துச்சொல்லி, நல்லதொரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அரசின் செயலோ எரிகிற வீட்டை அணைக்க முயற்சி செய்யாமல், இன்றைக்கு அனைவருக்கும் கறிக்குழம்புச் சாப்பாடு என்று சொல்லும் வேடிக்கையாக இருக்கிறது.

அரசின் இந்த நடவடிக்கையினால், ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையாது என்பது மட்டும் நிச்சயம்!

- ஆசிரியர்