நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வளர்ச்சி குறையும் தமிழகம்!

வளர்ச்சி குறையும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்ச்சி குறையும் தமிழகம்!

ஹலோ வாசகர்களே..!

லரது கவனத்தைப் பெறாமலே போயிருக்கிறது தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் குறித்து வெளியான தகவல்கள். கடந்த 2016-17-ம் ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 7.9 சதவிகிதம். இது, கடந்த 2015-16-ம் ஆண்டைக் காட்டிலும் ஏறக்குறைய 1 சதவிகிதம் குறைவு.

சேவைத் துறையில் நமது மாநிலம் அடைந்த வளர்ச்சியைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால், உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் நாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சுகிறது. உற்பத்தித் துறையில் வெறும் 1.65% வளர்ச்சியை மட்டுமே நாம் கண்டுள்ளோம். 2015-16-ல் 7.19 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை வளர்ச்சி, கடந்த 2016-17-ல் வெறும் 3.98 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

வளர்ச்சி குறையும் தமிழகம்!



இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து நமக்குச் சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. சேவைத் துறையின் வளர்ச்சியில் மட்டுமே நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவதைவிட, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளின் வளர்ச்சியிலும் நாம் அதிக அக்கறையுடன் செயல்பட்டாக வேண்டும்.

நமது மாநிலம் விவசாயத்துக்குப் பெயர் போனது. பல லட்சம் பேர் இன்றும் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். ஆனால், விவசாயத் துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் காரணமாக, பலரும் அதிலிருந்து வெளியேறி வருவதினால், அதன் உற்பத்திக் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தப் போக்கினை நமது மாநில அரசாங்கம் தொடரவிட்டால், நமக்குத் தேவையான உணவினை வெளிமாநிலங்களில் இருந்து தருவிக்க வேண்டிய நிலை வந்துவிடும். இதேபோல, அதிக அளவில் தொழிற்சாலை இருக்கும் மாநிலங்களில் ஒன்று நம் தமிழகம். இந்தத் துறையிலும் உள்ள பல்வேறு பிரச்னைகள் காரணமாக, வளர்ச்சியானது அதிவேகத்தில் குறைந்து வருகிறது. இந்தச் சரிவை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், கடந்த ஓராண்டாகத் தமிழகத்தில் நிலவிய கடும் வறட்சி, மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் எனப் பல்வேறு மோசமான நிகழ்வுகள் நடந்தபின்னும் இந்த அளவு வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம். தற்போது ஆட்சிப் பொறுப்பினை யார் கைப்பற்றுவது என்பதில் கடும் போட்டி நிலவுவதால், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து யாரும் கவலைப்படுவது போலத் தெரியவில்லை.

இப்படியே போனால், அடுத்த ஆண்டில் இதைவிடக் குறைவான வளர்ச்சியையே நம்மால் அடைய முடியும். பதவிச் சண்டையை ஓரங்கட்டி விட்டு, நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிடில்,  தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க ஜெயலலிதா கண்ட கனவு, காணாமலே போய்விடும்!

-ஆசிரியர்