நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கொள்ளை லாபத்தைத் தடுக்கும் அமைப்பு தேவை!

கொள்ளை லாபத்தைத் தடுக்கும் அமைப்பு தேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
கொள்ளை லாபத்தைத் தடுக்கும் அமைப்பு தேவை!

ஹலோ வாசகர்களே..!

ரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகமான இந்த ஒரு வாரத்தில் அதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த விமர்சனங்களில் முக்கியமானது, வர்த்தக நிறுவனங்கள் சம்பாதிக்கும் லாபத்துக்கு எதிராகத் தேசிய அளவில் ஓர் அமைப்பினை நிறுவுவதற்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பு. இப்படியொரு அமைப்பினை உருவாக்குவது, இந்திரா காந்தி காலத்தில் இருந்த ‘இன்ஸ்பெக்டர் ராஜ்ய’த்தையே உருவாக்கும்; அதிகாரிகள்  ஆட்டம் போடுவதற்கு மீண்டுமொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமா என்கிற கேள்வியைச் சிலர் எழுப்பியிருக்கின்றனர்.

கொள்ளை லாபத்தைத் தடுக்கும் அமைப்பு தேவை!



இந்த விமர்சனத்தில் கொஞ்சம் நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. வர்த்தக நிறுவனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அனைத்தையும் அதிகாரிகளிடம் தந்துவிட்டால், பின்பு அவர்களைத் திருப்திப்படுத்தத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதே வர்த்தகர்களின் வேலையாக மாறிவிடும். இதனால் அவர்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

இதற்காக இந்த அமைப்பினை ஏற்படுத்தாமலும் இருக்க முடியாது. காரணம், ஜி.எஸ்.டி-யின் அடிப்படையில் எந்தெந்தப் பொருள்களுக்கு எவ்வளவு வரி என மத்திய அரசாங்கம் தெளிவாக எடுத்துச் சொன்னபின்பும், அந்த வரியின் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்யாமல், இஷ்டத்துக்கு விலை வைத்து விற்கின்றன பல வர்த்தக நிறுவனங்கள்.

வர்த்தக நிறுவனங்கள் இப்படி அதிக லாபம் வைத்து விற்பதினால், அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. காரணம், வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கப்படும் தொகைக்கு அரசிடம் கணக்குக் காட்டியாக வேண்டும். முறையற்ற வகையில் அதிகப் பணத்தை வாங்கியிருந்தால், அதை அரசாங்கமே எடுத்துக்கொண்டுவிட வாய்ப்புண்டு.

ஆனால், முறைப்படி ரசீது மூலமாக  வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்னை. இன்றைய நிலையில், நம் நாட்டில் முறைப்படி வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் குறைவே. ஹோட்டல்களில் தரும் ரசீதை அவர்களே திரும்ப வாங்கிவிடுகிறார்கள். மருந்துக் கடைகளில்    இன்னும்கூடக் கையினால் எழுதிய பில்லையே தருகிறார்கள். இவர்கள், மக்களிடமிருந்து அதிகமாகப் பெற்ற தொகையை அரசிடம்  கணக்கு காட்டுவார்களா என்பது சந்தேகமே.

எனவே, ஜி.எஸ்.டி-யின் அடிப்படையில்தான் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் கண்டறிய நிச்சயம் ஓர் அமைப்பு வேண்டும். அப்படியொரு அமைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் புதிய வரி விதிப்பினால் கிடைக்கும் நன்மை வாடிக்கையாளர்களை முழுமையாகச் சென்றடையும்.

 - ஆசிரியர்