
ஹலோ வாசகர்களே..!
கடந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருப்பது, கல்லூரிகளில் படிக்கும் பல லட்சம் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஒருசேர பயமுறுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில், தமிழகத்தில் உள்ள மொத்த வேலை வாய்ப்புகள் 12% குறைந்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது என்கிற கேள்விதான் எழுகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவின் பிற மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கொல்கத்தா 40%, அகமதாபாத் 20%, மும்பை 15%, ஹைதராபாத் 5%, பெங்களூரு 3% வளர்ச்சி கண்டுள்ளதாக தனியார் இணையதளம் ஒன்று நடத்திய சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. வேலை வாய்ப்புக் குறைவில் இந்திய சராசரி 11 சதவிகிதமாக இருக்க, நமது மாநிலமோ அதைவிட அதிகமாக இருப்பது கவலை தரும் உண்மை.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசாங்கம் கடந்த ஒரு வருடத்தில் எந்த முக்கிய நடவடிக்கையையும் எடுக்காததினால் ஏற்பட்ட விளைவே இது. ஓராண்டுக்குமுன், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட, அரசுப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயின. அவர் காலமானபின்பு அமைந்த ஆட்சியும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தினம் தினம் போராடி வருகிறதே ஒழிய, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து எந்த வகையிலும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.
தமிழகத்தை நோக்கிவந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர் களிடம் ‘கட்டிங்’ கேட்டு வற்புறுத்தியதன் விளைவு, அந்த நிறுவனங்கள் ஆந்திராவுக்கும் குஜராத்துக்கும் ஓடிவிட்டன. தொழில் சூழல் சரியில்லை, பொருள்களுக்கான தேவை குறைவு, புதிய தொழில் தொடங்கக் கடன் கிடைக்கவில்லை ஆகிய காரணங்கள் எல்லாவற்றையும்விட, ஆட்சியாளர் களின் தவறான அணுகுமுறையே இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம்.
இனியும் இந்த நிலை தொடரக்கூடாது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தை இந்த ஆட்சியாளர்கள் தொடர அனுமதித்தால், அடுத்த ஆண்டில் இதைவிட மோசமான நிலை ஏற்படும். பல கனவுகளோடு படித்து வெளிவரும் இளைஞர்களுக்கு வேலை இல்லையெனில், அவர்கள் தடம் மாறி தவறான பாதைக்குச் செல்வதற்கு அரசே வழி வகுத்ததாகிவிடும். இதனால் தமிழகத்தின் அமைதி குலைந்து, கலவர பூமியாக மாற நேரிடும்.
இந்த நிலை உருவாகாமல் இருக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவது மிகவும் அவசியம்.
- ஆசிரியர்