நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தை அதிகரியுங்கள்!

நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தை அதிகரியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தை அதிகரியுங்கள்!

ஹலோ வாசகர்களே..!

மிழகத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் அதிகரிப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், சில நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் உயர்ந்திருப்பது நம்மைக் கவலை அடையவே செய்கிறது.

அரசுக்குச் சொந்தமான 51 நிறுவனங்களில் 34 லாபம் ஈட்டியிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 2014-15-ம் நிதியாண்டில், அரசுக்குக் கிடைத்த லாபத்தைவிட, கடந்த நிதியாண்டில் ரூ.3,572 கோடி லாபம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக் காரணம் அரசாங்கம் என்பதைவிட, அந்த நிறுவனங்கள் புரஃபஷனல் ரீதியாக நடத்தப்படுவதே. இப்படி நடத்தப்பட்டதால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டி.என்.பி.எல் என்னும் பொதுத்துறை நிறுவனம், அரசுக்கு ரூ.253 கோடி லாபம் சம்பாதித்துத் தந்துள்ளது. 

நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தை அதிகரியுங்கள்!



ஆனால், 2014-15-ம் நிதியாண்டில் நஷ்டத்தில் இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 17-ஆக உயர்ந்து, இந்த நிறுவனங்கள் மூலம் ஏற்படும் நஷ்டம் கணிசமாக அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இந்த நஷ்டத்துக்குக் காரணம், இந்த நிறுவனங்களின் நிர்வாகம் புரஃபஷனலாக நடத்தப்படுவதற்குப் பதிலாக அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக இருப்பதே. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம். கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தால் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.12,756 கோடி. போக்குவரத்துத் துறையிலும் ஆண்டுக்காண்டு நஷ்டம் அதிகரித்து வரக் காரணமும் அதுவே.  

பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தை அதிகரிக்க, அந்த நிறுவனங்களை இன்னும் திறமையாக நடத்தத் தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, நல்ல சேவையை அளிப்பதன் மூலம் பொதுத் துறை நிறுவனங்களால் நிச்சயம் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்.

அதே நேரத்தில், நஷ்டத்தை ஈட்டிவரும் பொதுத் துறை நிறுவனங்களில் என்ன பிரச்னை என்பதை ஆராய்ந்தறிந்து, அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடித்து நஷ்டத்தைக் குறைக்க நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும். இந்த நிறுவனங்களை புரஃபஷனல் ரீதியில் நடத்துவதன் மூலம் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் சூழலை ஏற்படுத்தி, லாபப் பாதைக்குத் திருப்ப முடியும்.

பொதுத் துறை நிறுவனங்களின் நோக்கம், நியாயமான கட்டணத்தில் மக்கள் சேவை என்றாலும் அவை லாபம் சம்பாதிக்கக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. எனவே, பொதுத் துறை நிறுவனங்களில் லாபம் சம்பாதிக்கத் தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழக ஆட்சியாளர்கள் தலையாயக் கடமையாக உணரட்டும்! 

- ஆசிரியர்