நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

மக்களைக் குழப்புவதே மத்திய அரசின் வேலையா?

மக்களைக் குழப்புவதே மத்திய அரசின் வேலையா?
பிரீமியம் ஸ்டோரி
News
மக்களைக் குழப்புவதே மத்திய அரசின் வேலையா?

ஹலோ வாசகர்களே..!

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் கசிந்து, பொது மக்களைப் பெரும் பீதி அடையச் செய்திருக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகமான அந்த நோட்டுகள் எந்த நேரத்திலும் ஒழிக்கப்படலாமோ என்கிற சந்தேகத்தினால் மக்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

மக்களைக் குழப்புவதே மத்திய அரசின் வேலையா?கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஒழித்த மத்திய அரசாங்கம், புதிய ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இடைப்பட்ட காலத்தில் ரூ.7.4 லட்சம் கோடி மதிப்புக்கு 3.7 கோடி எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இப்போது, ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, ரூ.500, ரூ.200 நோட்டுகளை அச்சடிப்பதில்  கவனம் செலுத்தி வருகிறது ஆர்.பி.ஐ. 

இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்குமா அல்லது கூடிய விரைவில் ஒழிக்கப்படுமா என மக்களுக்கு எழுந்த கேள்வியைச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி, அதற்கான விளக்கத்தை மத்திய நிதித் துறை அமைச்சரிடம் கேட்க, அதற்கு அவர் எந்தத் தெளிவான பதிலும் அளிக்காமல்விட்டது மக்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசாங்கம் இனிவரும் நாள்களில் திடீரென அறிவித்தால், மக்கள் அதைக் கொஞ்சம்கூட விரும்ப மாட்டார்கள் என்பதைப் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் புரிந்துகொள்ள வேண்டும். உயர் மதிப்பிலான நோட்டுகளை ஏற்கெனவே ஒருமுறை செல்லாமல் ஆக்கியதன் மூலம், செல்லாமல் போன பழைய நோட்டுகளைத் தந்து புதிய நோட்டுகளைப் பெறுவதற்கு மக்கள் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இப்போது இன்னொரு முறையும் அதே நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுத்தால், இந்த அரசை துக்ளக் அரசாகவே மக்கள் கருதத் தொடங்கிவிடுவார்கள்.

பெரும் பணக்காரர்கள் ரூ.2,000 நோட்டுகளைக் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதனால்தான் ரூ.2,000 நோட்டுகள் புழங்குவது குறைந்திருக்கிறது என மத்திய அரசாங்கம் நினைத்தால், அதைத் தடுக்கத் தேவையான வழிமுறைகளை மத்திய அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை அலையவிடக் கூடாது.

பண மதிப்பு நீக்கத்தை அறிவித்தபிறகு, மக்களிடமிருந்து திரும்பப் பெற்ற தொகை எவ்வளவு என்கிற கேள்விக்கு மத்திய அரசாங்கமோ அல்லது ரிசர்வ் வங்கியோ இதுவரை பதில் சொல்லவில்லை. இனியும் பதில் சொல்லுமா என்பதும் சந்தேகமே. இந்த நிலையில், ரூ.2,000 நோட்டினை ஒழித்துக் கட்டும் முடிவினை எடுத்தால், அடுத்து வரும் தேர்தலில் மக்களின் ஆதரவை இந்த அரசாங்கம் இழக்கும் என்பது உறுதி!

- ஆசிரியர்