
ஹலோ வாசகர்களே..!
சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயின் விலையைப் படிப்படியாக உயர்த்த முடிவெடுத்துள்ளது மத்திய அரசாங்கம். இதனால் மத்திய அரசின் மானியச் சுமையானது வெகுவாகக் குறையும் என்பது அரசுத் தரப்பிலிருந்து முன்வைக்கும் வாதம்.

இந்த வாதம் உண்மைதான். கடந்த 2014-15-ல் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசாங்கம் தந்த மானியம் ரூ.410. இது 2016-17-ல் ரூ.109-ஆகக் குறைந்திருக்கிறது. இதேபோல, கடந்த 2014-15-ல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு மத்திய அரசாங்கம் தந்த மானியம் ரூ.28. இது 2016-17-ல் ரூ.11-ஆகக் குறைந்திருக்கிறது.
சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மத்திய அரசாங்கம் அளித்துவந்த மானியம் கடந்த சில ஆண்டுகளிலேயே வெகுவாகக் குறைய, கொஞ்சநஞ்சமுள்ள மானியத்தையும் முழுவதுமாக ஒழித்துக் கட்ட மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கலாம். இதனால் தேவை இல்லாதவர்களுக்கு மக்களின் வரிப் பணம் மானியமாகப் போய்ச் சேருவது நிற்கும்.
ஆனால், அரசின் செலவீனத்தைக் குறைக்க ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலைமீது கைவைக்கும் மத்திய அரசாங்கம், எல்லா விஷயங்களிலும் இப்படிக் கறாராக நடந்துகொள்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது நடந்த பல நிகழ்ச்சிகள். சாதாரண மக்களெல்லாம் சில ஆயிரம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற நாள் கணக்கில் வங்கியின் முன் காத்துக் கிடந்தபோது, பணம் படைத்த அரசியல்வாதிகள், பல ஆயிரம் கோடி ரூபாய் பழைய நோட்டுகளைத் தந்து, புதிய நோட்டுகளைப் பெற்றது மத்திய அரசுக்குத் தெரியாதா? தெரிந்தபின் அவர்கள்மீது மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இயற்கை வளங்களைச் சுரண்டி, மக்களை ஏமாற்றி, அரசுக்குத் துரோகம் செய்து, கோடிக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் கொள்ளையர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப் போட மட்டுமே தெரிந்த அப்பாவி மக்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்? கொள்ளையர்கள் மீது கைவைத்தால், அவர்கள் தரும் ‘நன்கொடை’யை இழக்க வேண்டியிருக்கும் என்கிற அச்சம்தானே இதற்குக் காரணம்?
இந்தக் கேள்விகளுக்கு இப்போது இல்லையென்றாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கும் பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கம் நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
- ஆசிரியர்