நடப்பு
Published:Updated:

மோடியை எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!

மோடியை எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மோடியை எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!

ஹலோ வாசகர்களே..!

பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி மிகச் சிறப்பாக நடந்துவருவதாகவே நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், களத்தில் இருக்கும் நிலைமை வேறுவிதமாகவே இருக்கிறது. 

ஆர்.பி.ஐ சமீபத்தில் வெளியிட்ட சர்வேயின்படி, நம் மக்களின் வருமான வளர்ச்சியானது கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் இருந்ததைவிடக் குறைந்திருக்கிறது. நம் நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் கடந்த 18 மாதங்களில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள்.  

இதுமட்டுமல்ல, கடந்த மார்ச் நிலவரப்படி, நமது ஜி.டி.பி-யில் நிறுவனங்களின் கடன் விகிதம் ஏறக்குறைய 55 சதவிகிதமாக உள்ளது. இப்படிக் கடன் வாங்கிய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு பங்கு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் திறனை இழந்து வருவது கவலைதரும் விஷயம்.

மோடியை எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!இந்த நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்ய தேவையான கடனை நிறுவனங்கள் வாங்க தயங்குகின்றன. நமது தொழில் நிறுவனங்கள் உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது வரலாறு காணாத அளவுக்கு 70 சதவிகிதம் என்கிற அளவிலேயே இருக்கின்றன. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தருவது கடந்த  ஆண்டில் 50 சதவிகிதமாக இருந்தது, இப்போது 30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தொழில் வளர்ச்சி இல்லாததால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்துள்ளது. இதனால் மக்களின் சேமிப்பும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளாத நிலையில், மத்திய அரசாங்கமாவது புதிய திட்டங்களுக்கு செலவழிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக அரசாங்கமும் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டிருப்பதால் வளர்ச்சி என்பது மாறி, தளர்ச்சி என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

இவை எல்லாவற்றையும்விட கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான 2017-18-ம் ஆண்டுக்கான பொருளாதார சர்வேயில், நமது வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. 

இத்தனை புள்ளிவிவரங்களையும் வெறும் எண்களாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை அவசர எச்சரிக்கையாக மத்திய அரசாங்கம்  உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது பொருளாதாரம், வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். இதன்மூலம் மட்டுமே, நாட்டு மக்களிடம் நல்ல பெயரை எடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

- ஆசிரியர்