நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பொருளாதார வளர்ச்சியைப் பின்தங்கவிடக் கூடாது!

பொருளாதார வளர்ச்சியைப் பின்தங்கவிடக் கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதார வளர்ச்சியைப் பின்தங்கவிடக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

ந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நமது ஜி.டி.பி வளர்ச்சியானது 5.7 சதவிகிதமாகக் குறைந்திருப்பதாக மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் மதிப்பிட்டிருக்கிறது. ஜனவரி - மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6.1 சதவிகிதமாக நமது ஜி.டி.பி வளர்ந்தது  குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான ஜி.டி.பி வளர்ச்சி இது என்பது நமக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியைப் பின்தங்கவிடக் கூடாது!



இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, பண மதிப்பு நீக்கம். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார் பிரதமர் மோடி. ஆனால், அரசாங்கம் இதுவரை அச்சடித்து வெளியிட்ட உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் 99% திரும்ப வந்தது. ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே திரும்ப வராமல் போனது. செல்லாமல் ஆக்கப்பட்ட பணம் தங்கமாகவும் அமெரிக்க டாலராகவும் மாறியதே இதற்குக் காரணம். பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இரண்டாவது, சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. புதிய இந்த வரியானது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் கொண்டு வந்ததினால், வர்த்தகர்கள் புதிதாகப் பொருள்களை வாங்குவதைவிட பழைய பொருள்களை விற்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் பொருள் உற்பத்தி குறைந்து, விற்பனையும் சரிந்தது.  

இந்த இரு நடவடிக்கைகளினால் நம் ஜி.டி.பி வளர்ச்சியானது ஓரளவுக்குச் சரியும் என்பதைச் சிலர் முன்கூட்டியே அனுமானித்து எச்சரித்து வந்தனர். ஆனால், மத்திய அரசாங்கமோ இந்தச் சரிவினை எதிர்பார்த்து, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை எதையும் பெரிய அளவில் எடுக்கவில்லை. இனியும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, பொருளாதார வளர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைவிட, முன்னேற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே நாட்டின் நலன் விரும்பும் அனைவரது எதிர்பார்ப்பு.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடிக்கு மக்கள் வாக்களித்து ஏகோபித்த ஆதரவு தந்ததற்குக் காரணம், குஜராத் மாநிலத்தை முன்னேற்றியது போல, இந்தியாவையும் முன்னேற்றுவார் என்பதற்காகத்தான். ஆனால், அவரது ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி முந்தைய ஆட்சியைவிடக் குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்க அவர் அனுமதித்தால், அடுத்த தேர்தலில் அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இதை மனதில்கொண்டாவது மத்திய அரசாங்கம் இனி வேகமாகச் செயல்படட்டும்!

- ஆசிரியர்