நடப்பு
தொடர்கள்
Published:Updated:

முன்னேற்றம் தருமா அமைச்சரவை மாற்றம்?

முன்னேற்றம் தருமா அமைச்சரவை மாற்றம்?
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னேற்றம் தருமா அமைச்சரவை மாற்றம்?

ஹலோ வாசகர்களே..!

டந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த இரண்டு முறை செய்த மாற்றத்தைவிட இந்த முறை ஒரே விஷயத்தைக் கவனத்தில் கொண்டு அவர் இதைச் செய்திருக்கிறார். அது, 2019-ல் நடக்கும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே.

பாதுகாப்புத் துறையை நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர் பெற்ற நிர்மலா சீதாராமனிடம் தந்திருக்கிறார். இனி சீனாவும், பாகிஸ்தானும்  அடக்கி வாசிக்கும் என்றும், உள்நாட்டில் தயாராகும் தளவாடங்களை நம் ராணுவத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் இவரது செயல்பாட்டின் மூலம் நம் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி காணும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.

முன்னேற்றம் தருமா அமைச்சரவை மாற்றம்?



ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்தத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா நடவடிக்கை களையும் எடுத்தார். அவர் செய்ததைவிட இன்னும் அதிகமான செயல்பாட்டினை சுரேஷ் பிரபுவிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் மக்கள். உலகப் பொருளாதாரம் சரியில்லை என்ற காரணத்தையே சொல்லிக் கொண்டிருக்காமல், பல்வேறு நாடுகளுடன் ஏற்றுமதி-இறக்குமதி குறித்த புதிய ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதன் மூலம் நம் ஏற்றுமதியைக் கணிசமாக அதிகரிக்க முடியும். 

பியூஷ் கோயல் ரயில்வே துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராக இவர் இருந்தபோது கொண்டுவந்த உதய் (UDAY) திட்டம் பல்வேறு மாநிலங்களின் மின் துறைகளின் கடனைக் கணிசமாகக் குறைத்துள்ளது. தற்போது ரயில்வே துறையில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருக்கும் வேளையில், அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்துவதுடன், எதிர்கால இந்தியா எதிர்பார்க்கும் அதிநவீன போக்குவரத்துத் துறையாக ரயில்வே துறையை மாற்ற வேண்டிய கடமை அவருக்கு நிச்சயம் உண்டு.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் இடம்பிடித்த அனைவரும் தங்கள் துறையில் மிகப் பெரிய சாதனை செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் செயல்பட்டால் மட்டுமே பல பாசிட்டிவான மாற்றங்களைக் கொண்டு வந்து, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிய அளவில் பெருக்க முடியும்.

பிரதமர் மோடி உள்பட அனைத்து அமைச்சர்களும் அதிரடித் திட்டங்களை அரங்கேற்றுவதை விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்வேகத்துடன் எடுத்தால் மட்டுமே நம் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். அப்படி செல்லும் பட்சத்தில், மீண்டுமொரு வாய்ப்பைத் தர மக்கள் தயங்கவே மாட்டார்கள்.

-ஆசிரியர்