
ஹலோ வாசகர்களே..!
பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் நாட்டின் கூட்டு முயற்சியால் புல்லட் ரயில் யுகத்தில் நாம் நுழைந்திருப்பது மகிழ்ச்சி தரும் வளர்ச்சிதான். ஆனால், இதே போன்ற வளர்ச்சியை நாம் பிற துறைகளிலும் காண்கிறோமா? சர்வதேச நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளைப் பார்த்தாலே போதும், நம் வளர்ச்சி எப்படி என்பது துல்லியமாகத் தெரியும்.
முதலாவது அறிக்கை, உலக அளவில் உள்ள மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களில் சீனாவின் இரண்டு உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று, சாதனை படைத்துள்ளன. முதல் 200 இடங்களில் அமெரிக்காவின் 62 உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. ஆனால், 250 முதல் 800 இடங்களில் நம் நாட்டிலிருந்து வெறும் 10 உயர்கல்வி நிறுவனங்களே இடம் பிடித்துள்ளன. முன்பு பெற்ற இடங்களைக்கூட தக்கவைத்துக் கொள்ளாமல் நாம் பின்தங்கியிருக்கிறோம்.

இரண்டாவது அறிக்கை, சர்வதேச மனித மூலதனக் குறியீடு குறித்து உலகப் பொருளாதார மையம் வெளியிடும் ரிப்போர்ட். 130 நாடுகளில் மனித மூலதனப் பயன்பாடு குறித்த இந்தப் பட்டியலில் நமது இந்தியா, கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் முன்னேறி 103-வது இடத்தைப் பிடித்துள்ளது. ‘பிரிக்’ நாடுகளில் பிரேசில் (77), தென் ஆப்பிரிக்காவைவிட (87) மிகவும் பின்தங்கியே நிலையிலே நாம் இருக்கிறோம். ‘சார்க்’ நாடுகளில் இலங்கை, நேபாளத்தைவிட பின்தங்கியிருக்கிறோம்.
வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேறுவதைவிட பின்நோக்கிச் செல்கிறோம் என்பதையே இந்த இரண்டு ரிப்போர்ட்டுகளும் பட்டவர்த் தனமாகச் சொல்கின்றன. உலக அளவில் இளம் வயதினர் மிக அதிக அளவில் உள்ள நாடு நம் நாடு. ஆனால், அவர்களின் திறமையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நமக்குத் தெரியவில்லை. படித்துமுடித்த இளைஞர்களுக்கு வேலை தரும் எந்தத் திட்டமும் நம் அரசிடம் இல்லை. இப்படியே போனால், இப்போது நம்மைவிட பின்தங்கிய நிலையில் இருக்கும் பங்களாதேஷும், பாகிஸ்தானும்கூட நம்மைத் தாண்டி முன்நோக்கிச் சென்றுவிடும்.
மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதில் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் காட்டும் ஆர்வம், உலகத்தைப் புரிந்துகொண்டு, வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான திறமையை நமது இளைஞர் களிடம் வளர்ப்பதில் இல்லை. உலக அளவில் கல்வி நிறுவனங்கள் எப்படியிருக்கின்றன என்கிற கவலை கிஞ்சித்தும் இல்லாமல், உரிமைக்காகப் போராடுவதையே பெரிதாக நினைக்கும் ஆசிரியர்கள் அணுகுமுறை மாற வேண்டும்.
சர்வதேச அமைப்புகள் வெளியிடும் இந்த ரிப்போர்ட்டுகளை மத்திய அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்படவில்லை எனில், உலக உயர்கல்விப் பட்டியலில் நமக்குக் கிடைக்கும் இடம் இன்னும் குறையும் என்பது நிச்சயம்!
-ஆசிரியர்