நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தலைவலி போய் திருகு வலி வந்துவிடக் கூடாது!

தலைவலி போய் திருகு வலி வந்துவிடக் கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைவலி போய் திருகு வலி வந்துவிடக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

ம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைந்து வருகிறது என்பதைத் தொழில் துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர்கூட பேசத் தொடங்கிவிட்டார்கள். நமது ஜி.டி.பி வளர்ச்சியானது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவான 5.6 சதவிகிதத்துக்கு இறங்கியுள்ளது. 

தலைவலி போய் திருகு வலி வந்துவிடக் கூடாது!இந்த நிலையில், தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தேவையான பொருளாதார ஊக்குவிப்பு (Stimulus), பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்தபின் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி சொல்லியிருப்பது, நம் நாட்டில் பொருளாதாரம் வளர்வதற்குப் பதில்  தேய்ந்து வருகிறது என்பதை அவரே ஒப்புக்கொள்கிற மாதிரி உள்ளது. 

பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த, சுமார் ரூ.45,000 கோடி முதல் ரூ.50,000 கோடி வரை செலவிடப்படும் என மத்திய அரசாங்கம் சூசகமாகச் சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தாலும், இதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நன்கு ஆராய்ந்தபின்பே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். காரணம், இந்தத் தொழில் சலுகையை அறிவிப்பதால் நிதிப் பற்றாக்குறையானது அதிகரிக்கவே வாய்ப்புண்டு. இந்த நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 92 சதவிகிதத்தை முதல் நான்கு மாதங்களிலேயே செலவழித்துவிட்ட நிலையில், மேற்கொண்டு பணத்துக்கு மத்திய அரசாங்கம் எங்கே போகும்?

தற்போதுள்ள நிலையில், அரசு நிறுவனங்களிலுள்ள முதலீட்டைத் திரும்பயெடுக்க முடியவில்லை. ஆர்.பி.ஐ மூலம் அதிக டிவிடெண்ட் கிடைக்குமென்று பார்த்தால், அதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. தவிர, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார ஊக்குவிப்பை அறிவிக்கும்பட்சத்தில், பணவீக்கம் இன்னும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. ஆக, தலைவலியைப் போக்க ஏதாவது  செய்யப் போய் அதனால் நமக்குத் திருகு வலி வந்துவிடக் கூடாது.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, திவால் சட்டம் என வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசாங்கம் கொண்டுவருவது ஒரு புறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களையும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படாமல், சிறிய அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களின் கவனத்தைப் பெற வேண்டும் என்கிற நோக்கில் திட்டங்களைத் தீட்டாமல், நாட்டின் உண்மையான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு செயல்பட்டால், பொருளாதார ஊக்குவிப்பைத் தந்து தொழில் வளர்ச்சியைக் காணவேண்டிய அவசியம் நமக்கிருக்காது!

- ஆசிரியர்