நடப்பு
தொடர்கள்
Published:Updated:

முன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட வேண்டும்!

முன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது திடீரெனப் பலரும் அலசி ஆராயும் விஷயமாக மாறியிருக்கிறது. நம் பொருளாதாரம் சரிவின்போக்கில் இருப்பதை எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, மத்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும், பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவருமான யஷ்வந்த் சின்ஹாவே சொல்லியிருப்பது ஆச்சர்யமே.  

முன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட வேண்டும்!சின்ஹாவின் இந்தக் கருத்தினை ஆளும்கட்சியினர் கடுமையாக விமர்சித்தாலும், சில உண்மைகளை அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

மூன்று ஆண்டுகளுக்குமுன், மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்தத் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்குச் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. புதிய வேலைவாய்ப்பை உருவாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது. எல்லோரும் எளிதில் தொழில் தொடங்கும் சூழலை ஏற்படுத்தத் தவறியதன் மூலம் உற்பத்திப் பெருக்கம்  முடங்கியது.

நகர்ப்புறங்களில் இப்படிப் பல சிக்கல்கள் என்ற நிலையில், இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை பெரும் ஏமாற்றத்தைத் தந்ததன் விளைவாகக் கிராமப்புறங்களில் வளர்ச்சி குறைந்து, வேலைவாய்ப்பும் குறைந்தது. இந்த நிலையில், கிராமப்புற வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி, அதன் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது அரசு.

பொருளாதார வளர்ச்சி தளர்ந்த நிலையில், பணமதிப்பு நீக்கம்,        ஜி.எஸ்.டி போன்ற சீர்திருத்தங்களை அடுத்தடுத்து கொண்டுவந்ததால் பாசிட்டிவ் விளைவுகளைவிட நெகட்டிவ் விளைவுகளே அதிகம்.

மத்திய அரசின் ஆட்சியில் இத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், பிரதமர் மோடியையோ அல்லது ஆளும்கட்சியையோ தனிமைப்படுத்தி குற்றம் சாட்டிவிட முடியாது. இன்றைய நிலையில், பா.ஜ.க தவிர வேறொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும் என்பது கேள்விக்குறியே.

இப்போதுள்ள நிலையில், விமர்சனங்களைக் கண்டு மனம் கொதிக்காமல், வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை நம்பிக்கையுடன் எடுக்கும் தைரியம் ஆளும்கட்சிக்கு வரவேண்டும். நிபுணர்களிடமிருந்து தக்க ஆலோசனை பெறாமல் எடுக்கப்படும் எந்தக் காரியமும் வெற்றியைத் தராது. இதுநாள் வரை பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கையில் இறங்கிச் சாதிக்க நினைத்திருக்கலாம். இனியும் அப்படிச் செய்யாமல், நன்கு யோசித்துத் திட்டங்களைத் தீட்டினால், நம் பொருளாதாரம் நிச்சயம் உயரும்.

- ஆசிரியர்