நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்!

நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்!

ஹலோ வாசகர்களே..!

ந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமானது, ஏற்கெனவே கணித்ததைவிடவும் குறையும் என நமது ரிசர்வ் வங்கி மட்டுமல்ல, சர்வதேச நிதி ஆணையமும் (IMF) சொல்லியிருக்கிறது. இந்தாண்டில் 6.7 சதவிகித மாகவும், அடுத்தாண்டில் 7.4 சதவிகிதமாகவும் நமது பொருளாதார வளர்ச்சி இருக்குமெனவும் ஐ.எம்.எஃப் சொல்லியிருக்கிறது. 

நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்!இப்படிப் பலவிதமான நெகட்டிவ் செய்திகள் நமது பொருளாதார வளர்ச்சி பற்றி வந்துகொண்டிருந்தாலும், பாசிட்டிவாக வெளியாகும் செய்திகளையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

தொழில் உற்பத்தி வளர்ச்சியானது (IIP), கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பத்து மாதங்களுக்குமுன் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பணப் பரிவர்த்தனைத் தட்டுப்பாட்டினால், சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கடுமையாகப் பாதிப்படைந்தன. அந்தப் பாதிப்பிலிருந்து தொழில் நிறுவனங்கள் இப்போது வேகமாக வெளிவரத் தொடங்கியிருப்பதன் ஓர் அடையாளம்தான், கடந்த ஆகஸ்ட்டில் தொழில் உற்பத்தி வளர்ச்சி 4.3 சதவிகிதத்தை எட்டியிருப்பது. ஜி.எஸ்.டி அறிமுகமானபின்பே இந்த வளர்ச்சி வந்திருக்கிறது. எனவே, அடுத்துவரும் மாதங்களில் தொழில் உற்பத்தி இன்னும் உயரவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜி.எஸ்.டி-யால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும் எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும், சில்லறைப் பணவீக்கம் 3.28% என்கிற அளவிலேயே தொடர்ந்து இருப்பதைக் கண்டு, நாம் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம்.

அதுமட்டுமல்ல, நிறுவனங்களின் லாபமும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சி.எல்.எஸ்.ஏ இந்தியா நிறுவனமும், சிட்டி குரூப் நிறுவனமும் சொல்லியிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துவருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அண்மைக் காலத்தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கள் முதலீட்டை எடுத்து, தென் கொரியா, சீனா, தைவான் போன்ற நாடுகளில் முதலீடு செய்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் 83 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர். இதன் விளைவாக, பங்குச் சந்தையானது மீண்டும் உச்சத்தைத் தொட்டு, தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நிலைக்கு வந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், நமக்குத் தேவை நம்பிக்கைதான். தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கங்கள் தற்காலிகமானவையே; அடுத்துவரும் நாள்களில் மீண்டும் நமது பொருளாதாரம் முன்னேற்றம் காணும் என்கிற நம்பிக்கையுடன் அரசாங்கமும், மக்களும் செயல்பட்டால், நம்மால் நிச்சயம் வளர்ச்சி காண முடியும். தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த நன்னாளில், நாம் நம்பிக்கையுடன் எதிர்காலத்தைச் சந்திப்போம்.

- ஆசிரியர்