நடப்பு
Published:Updated:

முகூர்த் டிரேடிங்... கற்றுத் தரும் பாடம்!

முகூர்த் டிரேடிங்... கற்றுத் தரும் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
முகூர்த் டிரேடிங்... கற்றுத் தரும் பாடம்!

ஹலோ வாசகர்களே..!

கடந்த வியாழனன்று தீபாவளியையொட்டி நடந்த முகூர்த் டிரேடிங்கில், பலரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன. அன்றைய தினம் சென்செக்ஸ் 194 புள்ளிகளையும், நிஃப்டி 64 புள்ளிகளையும் இழந்தது கண்டு, சந்தையில் புதிதாக முதலீடு செய்ய வந்திருக்கும் முதலீட்டாளர்கள் கொஞ்சம் அதிரவே செய்தனர். 

முகூர்த் டிரேடிங்... கற்றுத் தரும் பாடம்!



அடுத்தாண்டு வரும் தீபாவளிக்குள் சென்செக்ஸ் 36000 புள்ளிகளைத் தொட வாய்ப்பிருப்பதாகச் சந்தை நிபுணர்கள் சொல்லியுள்ளனர். இது தற்போதைய நிலையிலிருந்து சுமார் பத்து சதவிகிதத்துக்கும் கொஞ்சம் அதிகமே. ரிஸ்க் இல்லாத வங்கி எஃப்.டி-யில் வருமானம் சுமார் 6%  கிடைக்க வாய்ப்பிருக்க, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, விஷயம் தெரிந்து, தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை நல்ல நிறுவனப் பங்குகளில் போட்டு, நீண்ட காலத்துக்குக் காத்திருந்தால், நல்ல லாபம் பார்க்க முடியும் என்பது எதிர்காலக் கணிப்பு மட்டுமல்ல, கடந்த கால வரலாறும்கூட!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தக் காலத்தில் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.   ரூ.2 லட்சத்துக்கு மேல் பணத்தை ரொக்கமாகக் கையாள முடியாமல் போனதால், கறுப்புப் பணப் புழக்கம் கணிசமாகக் குறைந்து, வங்கிகளின் எஃப்.டி-யில் வைக்கப்படும் பணத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடாகும் பணத்தின் அளவு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி  மூலம் அடுத்த சில காலாண்டுகளில் அரசின் வருமானம் பெருகவே செய்யும்.

பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கின என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கான மருந்து அடுத்தாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் வெளிப்படத் தொடங்கும் என்பதே நிபுணர்களின்  எதிர்பார்ப்பு. அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டானது நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாக அமைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. வங்கிகளில் இருக்கும் பணத்தையும் வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தையும் கொண்டு, புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும். நடுத்தர மக்களைக் கவர்ந்திழுக்க வரி விகிதத்தில், அதிக மாற்றங்களை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

இந்த விஷயங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த ஓராண்டு காலத்தில் பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கிலேயே இருக்கும் என்று எதிர் பார்க்கலாம். ஓராண்டு காலத்துக்கெனப் பங்குச் சந்தையில் முதலீடு      செய்யாமல், ஐந்து முதல் பத்தாண்டுகளுக்கு நல்ல பங்குகளில் முதலீடு செய்வதென முடிவெடுத்துச் செயல்பட்டால் வெற்றிதான்! 

- ஆசிரியர்