நடப்பு
Published:Updated:

சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள்!

சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள்!

ஹலோ வாசகர்களே..!

பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ஏறக்குறைய 8 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்ட நிலையில், வங்கித் துறையின் ஆரோக்கியத்தைச் சீர்படுத்த அடுத்த இரண்டாண்டுகளில் ஏறக்குறைய 2.11 லட்சம் கோடி ரூபாயைத் தந்து, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசாங்கம்.

வங்கிகளின் மூலதனத்தை அதிகரித்தாக வேண்டும் என்கிற கோரிக்கைக் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. என்றாலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு இப்போதுதான் மனம் வந்திருக்கிறது. இப்போதுகூட இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். 

சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள்!



அரசின் இந்த நடவடிக்கையால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். உதாரணமாக, மத்திய அரசாங்கம் அளிக்கவிருக்கும் 2.11 லட்சம் கோடி ரூபாயில் 1.35 லட்சம் கோடி ரூபாயை பாண்டுகள் மூலம் திரட்டித் தரவிருக்கிறது. இதற்கான வட்டியை மத்திய அரசாங்கம் தருவதன் மூலம் நிதிப் பற்றாக்குறைக் கணிசமாக அதிகரிக்கும். அதாவது, ஆண்டுதோறும் இந்த வட்டிச் சுமை சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும். மத்திய அரசாங்கம் இதை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது முக்கியமான கேள்வி.

சரி, வங்கிகளின்  மூலதனம் ஓரளவுக்கு அதிகரிக்கப்பட்டவுடன், அவை கடன் தருவது அதிகரிக்குமா என்றால் அதுவும் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை. பொருளாதாரம் இன்னும்கூட சுணக்கமாகவே இருக்கும் நிலையில், வங்கிகளில் கடன் வாங்கி, தனியார் நிறுவனங்கள் புதிய திட்டங்களைஅறிவிக்கவோ அல்லது ஏற்கெனவே உள்ள திட்டங்களை விஸ்தரிக்கவோ தயாரில்லை. ஏற்கெனவே, வாராக் கடன் அதிகமாக இருக்கும் நிலையில், வங்கிகள் யாருக்குக் கடன் தரப் போகிறது என்பது கேள்விக்குறியே.

என்றாலும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் விளைவுகள் நடக்க வேண்டுமெனில், வங்கிகள் கடன் தரும் விஷயத்தில் இனியாவது அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் தரப்பட்ட கடன்கள், வாராக் கடன்களாக மாறக் காரணம், இந்த அரசியல் தலையீடுதான். வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை இனிமேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், வங்கிகள் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.

வங்கிகளுக்குக் கூடுதலான நிதியுதவி செய்தால் மட்டும் மத்திய அரசின் கடமை முடிந்துவிடாது. அவை பரிபூரண சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிப்பதன் மூலமே, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும்.

-ஆசிரியர்