நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வாராக் கடன் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால்..?

வாராக் கடன் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால்..?
பிரீமியம் ஸ்டோரி
News
வாராக் கடன் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால்..?

ஹலோ வாசகர்களே..!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட வங்கிகள் வழங்கியிருக்கிற கடன்களின் தரத்தைச் சொல்லும் அறிக்கையை (Asset Quality Review) கவனமாகப் படித்தால் ஒரு விஷயம் சட்டெனப் புலப்படுகிறது. அது, வங்கிகளின் வாராக் கடன் பற்றியதாகும்.   

வாராக் கடன் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால்..?பொதுவாக, வாராக் கடன் பிரச்னை பொதுத் துறை வங்கிகளில்தான் அதிகமிருப்பதாக நாம் நினைக்கிறோம். காரணம், ஒவ்வொரு காலாண்டிலும் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால், பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை குறைகிறது.

தனியார் வங்கிகளோ இந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக வாராக் கடன் குறித்த கணக்கைக் குறைத்துக்காட்டுவதாக ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது.  இந்த அறிக்கையின்படி, தனியார் துறை சார்ந்த மூன்று வங்கிகள் கடந்த சில நிதியாண்டுகளில் வாராக் கடன் அளவைக் குறைத்துக் காட்டிவிட்டு,  பின்னர் உண்மையான நிலவரத்தை எடுத்துச் சொல்லியிருக்கின்றன. இதன்மூலம் தங்களுக்கு வாராக் கடன் பிரச்னை பெரிய அளவில் இல்லை என்கிற மாதிரியான பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் தங்களின் பங்கு விலையானது குறையாமலே பார்த்துக்கொள்கின்றன.

பொதுத் துறை வங்கிகளில் அரசியல் தலையீடு அதிகம் என்பதால், வாராக் கடன் அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், தனியார் வங்கிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகச் சம்பளம் தரப்படுவதுடன், அரசியல் தலையீடு என்கிற பிரச்னையும் இல்லை என்கிறபோது, அந்த நிறுவனங்களில் வாராக் கடன் எப்படி அதிகரிக்கிறது என்பது முக்கியமான கேள்வி. தனியார் வங்கிகள் குறுகிய  காலத்தில் நல்ல செயல்பாட்டைக் காட்டுவதற்காக வாராக் கடன்களைக் குறைத்துக்காட்டுகின்றனவா எனச் சந்தேகம் எழுகிறது.

வாராக் கடன் குறித்த கருத்துகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த புள்ளிவிவரங்கள் எப்படி மாற்றிக் காட்டப்படுகின்றன என்பதை ரிசர்வ் வங்கியானது தீர்க்கமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான நடைமுறையைப் பின்பற்றாமல், அனைவரும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். 

வாராக் கடன் குறித்த பிரச்னைக்கான காரணங்களை ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி தவறினால், எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

- ஆசிரியர்