நடப்பு
Published:Updated:

ஜி.எஸ்.டி மாற்றங்களை வரவேற்போம்!

ஜி.எஸ்.டி மாற்றங்களை வரவேற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி மாற்றங்களை வரவேற்போம்!

ஹலோ வாசகர்களே..!

பொருள் மற்றும் சேவைக்கான வரியில் மீண்டுமொரு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது, ஜி.எஸ்.டி கவுன்சில். ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபின் 227 பொருள்களுக்கு 28% வரி விதிக்கப்பட்டது. இனி 50 பொருள்களுக்கு மட்டுமே 28% வரி விதிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது. பல பொருள்களுக்கு வரி விகிதம் மாற்றப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கான  அதிகபட்ச விலையைவிடக் கூடுதல் விலை வைத்து விற்கக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது. 

ஜி.எஸ்.டி மாற்றங்களை வரவேற்போம்!


 
வரியைக் குறைத்திருப்பது மட்டுமல்ல, வரி தொடர்பாக அரசுக்குத்  தாக்கல் செய்ய வேண்டிய கணக்குகளைச் சமர்ப்பிப்பது தொடர்பாக 60 நாள் கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கான அபராதம் ரூ.200-லிருந்து ரூ.50-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

பொருள் மற்றும் சேவைக்கான வரி தொடர்பாக மத்திய அரசாங்கம் இவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்திருப்பதை நிச்சயம் வரவேற்கலாம்.  காரணம், ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபின், பல பொருள்களின் விலை உயர்ந்தது. இதனால் அந்தப் பொருள்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் வர்த்தகத்தில் சிறு தொய்வு ஏற்பட்டு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது. பல்வேறு பொருள்களை மக்கள் வாங்கி நுகர வேண்டுமெனில், அதற்கான வரி குறைக்கப்பட வேண்டும் எனப் பரவலாக எழுந்த கோரிக்கையை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பானது நீண்ட நாள் கிடப்பில் இருந்ததால், உடனே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற அக்கறையில் இந்த அரசாங்கம் சற்று வேகமாகச் செயல்பட்டிருக்கலாம். தவிர, இந்த வரிமுறை  நமக்கு முற்றிலும் புதிது. எனவே, அரசு நிர்ணயித்த வரிகள் தொடர்பாக சிலபல விமர்சனங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஓட்டு வாங்கவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நாம் கருதத் தேவையில்லை.

இந்தப் புதிய வரிமுறையில் இன்னும்கூட சில மாற்றங்கள் செய்யப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. சிமென்ட், பெயின்ட் போன்ற பொருள் களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உள்கட்டமைப்புக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் இந்தப் பொருள்களில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருப்பது ஏனோ? அடுத்தமுறை கூடும் கூட்டத்திலாவது இந்தப் பொருள்களுக்கான வரி குறைக்கப்படும் என்று நாம் எதிர்பார்ப்போம். 

‘தான் பிடித்த முயலுக்கு மூணு கால்’ என்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், தேவைப்படும் மாற்றங்களை மத்திய அரசாங்கம் செய்து தருவதற்காக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும், பிரதமர் மோடியையும் நாம் நிச்சயம் பாராட்டலாம்!

- ஆசிரியர்