
ஹலோ வாசகர்களே..!
பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, நல்லதொரு பாராட்டானது சர்வதேச நிறுவனத்திடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கிறது. நமது அரசுக் கடன் பத்திரங்களுக்கான தரத்தை Baa-3 என்கிற நிலையிலிருந்து Baa2 நிலைக்கு உயர்த்தியிருக்கிறது சர்வதேசத் தரச்சான்று நிறுவனமான மூடீஸ் (Moody’s). கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் உலகின் எந்தவொரு நாட்டின் தரத்தையும் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக மோடி அரசாங்கம், தொலைநோக்கு அடிப்படையில் விடாமுயற்சியுடன் செய்துவரும் சீர்திருத்த நடவடிக்கை களினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளைக் கருத்தில்கொண்டுதான் மூடீஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகவே நாம் இதைப் பார்க்க வேண்டும். மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரியினால் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்தாலும், நீண்ட காலத்தில் அதிகரிக்கவே வாய்ப்புண்டு என்று சொல்லியிருக்கிறது மூடீஸ் நிறுவனம்.
மோடி அரசாங்கம் கொண்டுவந்த திவால் சட்டம், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், ஆதார் எண்ணை அனைத்துச் சேவைகளுடன் இணைப்பது, அரசு மானியத்தை பயனாளர் களுக்கு நேரடியாகத் தருவது ஆகிய பல சீர்திருத்தங்கள் நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல பலனையே தரும் என்கிறது.
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகளால் குறுகிய காலத்தில் மக்களுக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், இந்த நடவடிக்கை களினால் நீண்ட காலத்தில் நல்ல விளைவுகள் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. வங்கிகளின் வாராக் கடன், கடந்த ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த காலாண்டில் மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது. இப்படிப் பல மாற்றங்களை அடுத்துவரும் நாள்களில் நாம் கேட்கலாம்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பெரிய முயற்சிகள் எடுக்காதது, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுத்துவருவது, வெளிநாட்டு முதலீடு குறைந்த அளவில் வந்துகொண்டிருப்பது எனப் பல குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் எடுத்துவருகிறது என்பதையும் மறுக்க முடியாது.
நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான நடவடிக்கைகளை எடுப்பதில் மட்டும் மோடி அரசாங்கம் கவனத்துடன் செயல்பட்டால், பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி காணும். அப்படி வளர்ந்தால், மத்தியில் மோடியின் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
- ஆசிரியர்