நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்!

வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்!

வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்!

ஹலோ வாசகர்களே..!

ந்த ஆண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கான முன்கூட்டிய மதிப்பீடு (GDP Advance estimate) வெளியாகி, நமக்குள் புதிய வருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. 2017-18-ம் ஆண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சியானது 6.5 சதவிகிதமாக இருக்கும் என மத்தியப் புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.   கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வளர்ச்சி  இது என்பதே நம் கவலைக்குக் காரணம்.

வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்!

2014-15-ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது நம் ஜி.டி.பி 7.5 சதவிகிதமாக இருந்தது. கடந்த 2016-17-ல் இது 7.1 சதவிகிதமாகக் குறைந்தது, இப்போது 6.5 சதவிகிதமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்தியப் புள்ளியியல் அலுவலகம் இப்போது கணித்துள்ள அளவுக்குக்கூட  ஜி.டி.பி வளர்ச்சி இருக்குமா என்பது சந்தேகமே. காரணம், இந்த நிதியாண்டில் முதலாம் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 5.7 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டில் 6.3 சதவிகிதமாகவும் இருக்கிறது. அடுத்த இரு காலாண்டுகளுக்கு 7 சதவிகிதத்துக்குக் குறையாமல் நமது பொருளாதாரம் வளர்ந்தால் மட்டுமே 2017-18 முழு ஆண்டுக்கான 6.5 என்கிற அளவை எட்ட முடியும். இல்லாவிட்டால், நம் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் குறையும்.
 
நம் ஜி.டி.பி வளர்ச்சி குறைய முக்கியக் காரணம், உலக நிலைமை. உலக நாடுகள் அனைத்தும் நம்மைவிட மோசமான வளர்ச்சியைக் கண்டுவர, நாம் மட்டும் எப்படி அதிக வளர்ச்சி காண முடியும்? ஆனால், இந்த வாதத்தை முன்வைத்து நமது மத்திய அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. நரேந்திர மோடியைப் பிரதமர் பதவியில் ஏகோபித்த ஆதரவுடன் மக்கள் அமர வைத்ததற்குக் காரணம்,  நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் வளர்த்தெடுப்பார் என்றுதான். ஆனால், கடந்த நான்காண்டுகளாகவே நமது பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்திருக்க முடியாமல் திணறி வருகிறது மத்திய அரசாங்கம்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் போதிய கவனம் செலுத்தாமல், நிதிச் சீர்திருத்தம் செய்வதில் மட்டுமே கண்ணும்கருத்துமாகச் செயல்பட்டதே இதற்குக் காரணம். பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி-யும் முக்கியமான நிதிச் சீர்திருத்தங்கள் என்றாலும், இவற்றினால் பொருளாதார வளர்ச்சி தற்காலிகப் பின்னடைவையே சந்தித்தது. இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த அதேசமயத்தில், உள்கட்டமைப்பைப் பெருக்கி, வேலைவாய்ப்பை அதிகரித்திருந்தால், இன்று நாம் கவலைப்படும் நிலை ஏற்பட்டிருக்காது. 

இனியாவது நமது பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தும் நடவடிக்கையை நமது அரசாங்கம் எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அடுத்த ஆண்டில் நடக்கும் பொதுத் தேர்தலை மோடி அரசாங்கம் கர்வத்தோடு சந்திக்க முடியும்.

- ஆசிரியர்