
ஹலோ வாசகர்களே..!
‘‘தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள். தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகள், ஆதரவை அளிக்க நான் உறுதி கூறுகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. தொழில் துறையில் பின்தங்கிய மாநிலம் என்று சொல்லப்படும் மேற்கு வங்கத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்து, அதில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் இப்படி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியத் தொழில் துறை வளர்ச்சியில் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக நமது தமிழகம் இருக்கிறது. இந்திய அளவில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. கார் தயாரிப்பில் தொடங்கி, ஜவுளி உற்பத்தி வரை தமிழகத்தில் இல்லாத தொழில்களே இல்லை.
ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் தொழில் முன்னேற்றத்தில் பின்னோக்கித்தான் செல்கிறது. தொழில் தொடங்கும் சூழல் குறித்த பட்டியலில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், 18-வது இடத்துக்குச் சென்றிருக்கிறது. தமிழகத்தில் தொழில் செய்துவந்த சில தனிநபர்களும், சில பெரிய நிறுவனங்களும் வேறு மாநிலங்களுக்குச் சென்று தொழில் தொடங்கும் அவலமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தொழில் சூழலை இன்னும் சிறப்பானதாக மாற்றும் வகையில் ஒற்றைச் சாளர முறையைக் கொண்டுவந்து, அதனை வேகமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்குரியதே. வெறும் அனுமதி என்கிற அளவில் நின்றுவிடாமல், தொழில் நிறுவனங் களுக்குத் தேவையான நிலத்தை விரைவாகத் தருவதுடன், மின்சாரம், சாலை, தண்ணீர் வசதிகளை உடனுக்குடன் தருவதும் அவசியம். இந்த நடவடிக்கைகளை எடுப்பது தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்க பேருதவியாக இருக்கும்.
நமது அண்டை மாநிலங்களான ஆந்திரமும், தெலங்கானாவும், கர்நாடகாவும் நமது தொழில் நிறுவனங்களைக் கவர்ந்து செல்வதைத் தடுக்க வேண்டுமெனில், நமது மாநிலத்தில் தொழில் செய்பவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, குறித்த காலத்துக்கொருமுறை முதல்வர் - தொழில் துறையினர் சந்திப்பு நடப்பது பயனுள்ளதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட நினைக்கும் அரசு அதிகாரிகளையும் இந்தப் பணியில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழகம் திட்ட மிட்டு எடுத்தால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பிற மாநிலங்களுடன் மட்டுமல்ல, பிற நாடுகளுடனும் தமிழகம் போட்டியிட முடியும்!
- ஆசிரியர்